Published : 17 Apr 2025 10:52 AM
Last Updated : 17 Apr 2025 10:52 AM
சென்னையில் அமித் ஷா உடனான இரண்டாம் கட்ட சந்திப்புக்கு பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அவரது வலது கரமாக வலம் வந்த அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளரும் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான கோவை சந்திரசேகர் அதிமுக-விலிருந்து விலகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
சின்னதாய் கட்டுமானப் பணிகளை செய்து வந்த சந்திரசேகர், எஸ்.பி.வேலுமணியின் அனுகிரகம் பெற்றதும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் கோவை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யும் நம்பிக்கையான ஒப்பந்ததாரராக மாறிப்போனார். கோயில் திருப்பணிகள், சொந்தச் செலவில் பொதுப்பணிகள் என கோவை வடவள்ளி தொடங்கி மருதமலை வரைக்கும் அறியப்பட்ட நபராக சந்திரசேகர் வலம் வந்தார்.
மாநகராட்சி தேர்தலில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் செல்வாக்கையும் மீறி தனது மனைவி சர்மிளாவை கவுன்சிலராக ஜெயிக்க வைத்தார். வடவள்ளி பேரூராட்சி பகுதியில் ஒரு காலத்தில் திமுக தான் செல்வாக்காக இருந்தது. அதை அதிமுக-வுக்கு சாதகமாக திருப்பியவர் சந்திரசேகர். இந்த நிலையில், வேலுமணிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ரெய்டு நடவடிக்கைகளின் போது சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களும் தப்பவில்லை.
ஆனால், இது தொடர்பான மேல் விசாரணைகளில் சந்திரசேகர் தனித்துவிடப்பட்டதாகச் சொல்கிறார்கள். அத்துடன் எஸ்.பி.வேலுமணியின் சகோதரருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியில் சந்திரசேகருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. அண்மையில் நடைபெற்ற வேலுமணியின் மகன் திருமண விழாவிலும் சந்திரசேகருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. இப்படியான சூழலில் தான், கட்சியைவிட்டு கனத்த இதயத்துடன் விலகுவதாகச் சொல்லி இருக்கிறார் சந்திரசேகர்.
இது குறித்து நம்மிடம் பேசிய கோவை அதிமுக நிர்வாகிகள் சிலர், “எஸ்.பி.வேலுமணியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய சந்திரசேகர், 2021-ல் கோவை வடக்கில் போட்டியிட விரும்பினார். ஆனால், கோவை தெற்கு பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டதால் கோவை வடக்கு தொகுதியை மாநகர் மாவட்டச் செயலாளரான அம்மன் அர்ச்சுணனுக்கு தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இருந்த போதும் கோவை வடக்கில் அம்மன் அர்ச்சுணனுக்காக கடுமையாக உழைத்து அவரை ஜெயிக்க வைத்தார் சந்திரசேகர். அடுத்து, 2024 மக்களவைத் தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் கைவிட்டுப் போனது. இப்படியான சூழலில் வேலுமணியுடனான உறவிலும் விரிசல் விழுந்து போனதால் விலகல் முடிவை எடுத்திருக்கிறார்” என்றார்கள்.
கோவை திமுக நிர்வாகிகளோ, “2021-ல் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றது. இதில், கோவை வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய 5 தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வாய்ப்பை இழந்தது.
இம்முறை அந்த ஐந்து தொகுதிகளையாவது வென்றிட வேண்டும் என திமுக தலைமை கணக்குப் போடுகிறது. அதற்கான வேலைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி எப்போதோ தொடங்கிவிட்டார். அந்த ஆட்டத்தில் தான் முதல் விக்கெட்டாக விழுந்திருக்கிறார் சந்திரசேகர்” என்று கண்ணைச் சிமிட்டுகிறார்கள்.
எஸ்.பி.வேலுமணியின் சொந்தத் தொகுதியான தொண்டாமுத்தூரில் அண்மையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “2026-ல் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். குறிப்பாக, தொண்டா முத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்” என்று சூளுரைத்துச் சென்றார்.
தனது பேச்சுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அவர் தான் சந்திரசேகரை தன் பக்கம் இழுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவில் திமுக-வில் இணையப் போகும் சந்திரசேகர் இம்முறை கோவை வடக்கில் திமுக வேட்பாளராக களமிறங்கினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். அதிமுக-வில் இருந்து வந்த கணபதி ராஜ்குமாரை கோவைக்கு எம்பி ஆக்கிய செந்தில்பாலாஜி இதையும் செய்தாலும் செய்வார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT