Published : 17 Apr 2025 05:45 AM
Last Updated : 17 Apr 2025 05:45 AM
வேலூர்: காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வாரியம் வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் இறைவன்காடு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 150 குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “இங்கு 4 தலைமுறைகளாக வசித்து வருவதுடன், அரசுக்கு வரி செலுத்தி வருகிறோம். தற்போது இந்த இடம் வக்பு சொத்து என்றும், வரி கட்டாவிட்டால் வீடுகள் அகற்றப்படும் என்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்” என்றனர்.
இதுகுறித்து இந்து முன்னனி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ‘கீழண்டை நவாப் மசூதி மற்றும் ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்கா சார்பில் வக்பு போர்டுக்கு வரி கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்தக் குடும்பங்களுக்கே பட்டா வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தர்காவின் முத்தவல்லி சையத் சதாம் தரப்பினர் கூறும்போது, “காட்டுக்கொல்லையில் 5 ஏக்கருக்கு மேல் வக்புக்கு சொந்தமான நிலம் உள்ளது.
1954-ல் இருந்தே இதற்கான ஆவணங்கள் உள்ளன. வக்பு இடத்தில் உள்ளவர்களை முறைப்படுத்தவே நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அந்த இடத்தை காலி செய்யவோ, இடிப்போம் என்றோ சொல்லவில்லை” என்றனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் தர்கா அளிக்கும் ஆவணங்களை பரிசீலித்த பின்னரே, உரிய முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாஜக கண்டனம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில், “காட்டுக்கொல்லையில் நடந்த நிகழ்வு, வக்பு சட்டத் திருத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. பல தலைமுறைகளாக வசித்துவரும் குடும்பங்களை சட்ட விரோதமாக அகற்ற முற்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், அங்குசென்று போராட்டத்தை முன்னெடுப்போம்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT