Published : 16 Apr 2025 09:05 PM
Last Updated : 16 Apr 2025 09:05 PM
சென்னை: அதிமுக கொடியைப் போல அமமுக கொடியை வடிவமைக்க தடை கோரியும், ரூ.25 லட்சம் இழப்பீடு கோரியும் டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த வி.கே.சசிகலா, துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்த டிடிவி தினகரன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது அதிமுக கொடி வடிவில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
அதையடுத்து அதிமுகவின் கொடி, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என டிடிவி தினகரனுக்கு தடை விதிக்கக் கோரியும், அதிமுக கொடி போல அமமுக கொடியை வடிவமைத்ததற்காக ரூ. 25 லட்சம் இழப்பீடு கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பழனிசாமியும் சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஏப்.16) நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமி, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதம்குமார் தெரிவித்து மனுவை தாக்கல் செய்தார். அதற்கு டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் சம்மதம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, தற்போது அமமுக பொதுச் செயலாளராக உள்ள டிடிவி.தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT