Published : 16 Apr 2025 04:52 PM
Last Updated : 16 Apr 2025 04:52 PM
சென்னை: “மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை இன்று (ஏப்.16) சந்தித்துப் பேசினார். அப்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மாநில உரிமைகளை பாதுகாத்ததற்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கு வலிமையான குரல் எழுப்பியதற்கும் முதல்வருக்கு பாராட்டும் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியது: “மாநிலங்களவை இடத்துக்கு கட்சியில் யார் என்று முடிவானதும் அப்போது நன்றி சொல்ல வருவோம். இப்போது வந்தது நன்றி சொல்ல அல்ல. முதல்வரை கொண்டாட வந்திருக்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமானது என்று சொல்வதைவிட இந்தியாவுக்கே சாதகமானது என்று சொல்லலாம். அதுவும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வந்திருப்பதால் கொண்டாடப்பட வேண்டும். அதில் பங்கேற்கவே நான் வந்தேன். இந்த வெற்றியை தேசிய அளவில் மற்றவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் கொண்டாட வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்" என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது சமூகவலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் மு.க.ஸ்டாலினையும் துணை முதல்வர் பாசத்துக்குரிய தம்பி உதயநிதி ஸ்டாலினையும் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நேரில் சந்தித்தேன். உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின். அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT