Last Updated : 16 Apr, 2025 01:57 PM

5  

Published : 16 Apr 2025 01:57 PM
Last Updated : 16 Apr 2025 01:57 PM

அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்: இபிஎஸ் நம்பிக்கை

சென்னை: சிதறுகின்ற வாக்குகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து எதிரிகளை வீழ்த்துவோம் எனவும், அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சர் கே.என்.நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் கடந்த 7-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியதுடன், மேல் விசாரணை நடத்தி, 11-ம் தேதி விளக்கமான செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதேபோல் அமைச்சர் பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்றபோது, அளித்த உறுதிமொழியை மீறி, இந்து மதத்தை பற்றியும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் ஒரு நிகழ்ச்சியில் அவதூறாக பேசியிருக்கிறார்.

உயர்ந்த பதவி வகிக்கும் அமைச்சர் பொது மேடையில் இப்படி பேசுவது தவறல்லவா? வேண்டுமென்றே ஒரு மதத்தை இழிவுபடுத்தி, பெண்களை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையான டாஸ்மாக் நிறுவனம், கடைகள் மற்றும் தனியார் மது உற்பத்தி ஆலைகளில் கடந்த மார்ச் 6-ம் தேதி அன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி, ரூ.1000 கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த காரணங்களுக்காக இன்றைக்கு சட்டப்பேரவையில், பேரவை விதி 72-ன் கீழ் அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதை குறித்து அவையில் பேசுவதற்கு அனுமதி கோரி பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால் சட்டப்பேரவைத் தலைவர் பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டார். அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். இதற்கு முன்பு கடந்த காலங்களில் கூட அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த ஆட்சிக்கு இது முக்கிய பிரச்சினையாக தெரியவில்லை. அமலாக்கத் துறை நடவடிக்கை குறித்து அரசு தான் விளக்க வேண்டும். அது அரசின் கடமை. இதை விசாரிக்க ஏன் பயப்படுகிறார்கள்? மத்தியில் 16 ஆண்டுகாலம் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போது மாநில சுயாட்சி சட்டத்தை கொண்டு நிறைவேற்றி இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும்போது இதை கொண்டுவர வில்லை.

ஆனால் இப்போது வேறு ஒருவர் மீது பழி போடுவதற்காக கொண்டு வந்திருக்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போது மாநில உரிமைகளை நிலைநாட்டி இருக்கலாமே. அதைவிடுத்து அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் தேர்தல் நாடகத்தை நேற்றே ஆரம்பித்துவிட்டனர். திமுக அமைச்சர் மீது மக்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர். அதை மடைமாற்றும் விதமாக மாநில சுயாட்சியை கொண்டு வந்துள்ளனர்.

அமைச்சர் ரகுபதி சொல்கிறார் அதிமுகவுக்கு அக்கறை இல்லை என்று. ரகுபதியை எம்எல்ஏ ஆக்கி, மத்திய அமைச்சராக மாற்றியது அதிமுக. இந்த நாட்டுக்கு ரகுபதியை அடையாளம் காட்டியது அதிமுக தான். அவர் வேஷ்டியை மாற்றிக் கொண்டு போனால் பரவாயில்லை. அதையெல்லாம் மறந்து தனது சுய லாபத்துக்காக திமுகவின் அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் சரியான பச்சோந்தி.

கட்சிகளின் கூட்டணி என்பது வலுவானதா? வலு இல்லாத கூட்டணியா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும். ஒரு கட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் சிதறுகின்ற வாக்குகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து எதிரிகளை வீழ்த்த வேண்டும். அந்த வகையில் ஆளும் திமுக கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட நாங்கள் முயற்சி செய்தோம். அதன் முதல்கட்டமாக பாஜக எங்களோடு இணைந்திருக்கிறது. தேர்தலுக்கு ஓராண்டு காலம் இருக்கிறது. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கின்றன.

அதிமுக ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அது எங்களது இஷ்டம் அதை கண்டு ஏன் திமுகவினர் எரிச்சல் படுகின்றனர்? ஏன் பயப்படுகின்றனர்? இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x