Published : 16 Apr 2025 01:24 AM
Last Updated : 16 Apr 2025 01:24 AM
சென்னை: தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க , நாளை மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, துறைகள் தோறும் மானிய கோரிக்கைள் குறித்த விவாதம் வரும் ஏப்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, தமிழக அரசின் பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்கவும், புதிய தி்ட்ட அறிவிப்புகள் குறித்த ஒப்புதலுக்காகவும் தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு, முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சட்டப்பேரவைக்கூட்டம் நடைபெறும் சூழலில், நாளை ஏப்.17ம் தேதி மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கான முதலீடுகள், சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதுதவிர, நீட் விவகாரத்தில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வக்பு வாரிய திருத்தச்சட்ட எதிர்ப்பு உள்ளிட்ட தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சமீபத்தில் அமைச்சர் பொன்முடி , நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையாகி அவரது கட்சிப்பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று எதி்ர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதவிர, அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியுள்ள அமைச்சர்கள் நேரு மற்றும் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. எனவே, இவை குறித்தும், விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அப்போது அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் வழங்கலாம் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT