Last Updated : 14 Apr, 2025 04:10 AM

4  

Published : 14 Apr 2025 04:10 AM
Last Updated : 14 Apr 2025 04:10 AM

பாமகவை வழிநடத்துவது யார் என்பதில் போட்டி: ராமதாஸ் - அன்புமணி இடையே அதிகரித்து வரும் மோதல்

பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் கட்சியை வழிநடுத்துவது யார் என்ற அதிகார மோதல் போக்கால் யார் பின்னால் செல்வது என தெரியாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்த மோதல் போக்கு ஏதோ புதிதாக இப்போது ஏற்பட்டது அல்ல. கட்சியின் இளைஞர் அணி தலைவரில் இருந்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி, கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த போதே, தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதல் தொடங்கிவிட்டது. கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணியை கவுரவ தலைவராக நியமித்த ராமதாஸ், அவர் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பை கருத்தில் கொண்டு, அவரது மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு கட்சியில் இளைஞர் அணி பொறுப்பை வழங்கினார். கட்சியில் எவ்வித பங்களிப்பையும் வழங்காத தமிழ்க்குமரனுக்கு கட்சியில் எப்படி பொறுப்பை வழங்கலாம் எனவும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த, அதுவும் தான் வகித்த பொறுப்பை வழங்கலாம் என்றும் ராமதாஸிடம் அன்புமணி கோபமடைந்து எதிர்ப்பு தெரிவித்தார். சில மாதங்களில் இளைஞர் அணி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் தமிழ்க்குமரன். இதனால், ராமதாஸும், ஜி.கே.மணியும் வருத்தமடைந்தனர். தொடர்ந்து கலந்தாலோசிக்காமல், தேர்தல் கூட்டணி போன்ற முடிவுகளை தன்னிச்சையாக அன்புமணி எடுத்தது ராமதாஸுக்கு கோபத்தை அதிகரித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் புதுச்சேரியில் நடந்த கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அந்த கோபத்தை ராமதாஸ் வெளிப்படையாகவே காட்டினார். 'கட்சியில் காலியாக இருக்கும் இளைஞர் அணி தலைவர் பொறுப்பில், தனது மூத்த மகள் காந்திமதியின் மகனும், பேரனுமாகிய முகுந்தன் பரசுராமன் என்பவரை நியமிக்கிறேன். அவர் இன்று முதல் அந்த பொறுப்பை ஏற்று, அன்புமணிக்கு உதவியாக இருப்பார்' என்று தெரிவித்தார். இதற்கு மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. அதற்கு ராமதாஸ், 'நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இது நான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் கட்சியில் இருக்க முடியாது' என்று கோபத்துடன் தெரிவித்தார். அப்போது, கையில் இருந்த மைக்கை தூக்கிபோட்ட அன்புமணி, 'சென்னை பனையூரில் எனக்கு புதிதாக ஒரு அலுவலகம் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அங்கு வந்து என்னை எல்லோரும் பார்க்கலாம்' என்று கூறிவிட்டு வெளியேறினார். தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரையும சமாதானம் செய்தனர். ஆனாலும், இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. முகுந்தனுக்கு கட்சியில் இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டாலும், அவருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், ராமதாஸ் வேதனை அடைந்தார்.

அதுவரை கட்சி பிரச்சினையாக இருந்தது, குடும்ப பிரச்சினையாக மாறியது. கட்சியில் மகனா, பேரனா?, யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு ராமதாஸ் சென்றார். அதேநேரம், வரும் மே 11-ம் தேதி மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டை பயன்படுத்தி கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க அன்புமணி திட்டமிட்டார். அதேபோல், அந்த மாநாட்டில் முகுந்தனுக்கு உரிய அங்கீகாரமும், முக்கியத்துவமும் கொடுக்க ராமதாஸ் முடிவு செய்தார். இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ், 'இனி பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன். தற்போது தலைவராக இருக்கும் அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்' என்று அதிரடியாக அறிவித்தார்.

ராமதாஸின் இந்த அறிவிப்பால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அன்புமணி, 'பாமக தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்' என்று நேற்று முன்தினம் இரவு அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸும், சென்னையில் அன்புமணியும் தனித்தனியாக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கமே உள்ளனர். இருவரையும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கட்சியின் இளைஞர் அணி தலைவர் முகுந்தன், சென்னை வந்து அன்புமணியை இல்லத்தில் சந்தித்து சமாதானம் செய்தார். ஆனால், கடந்த முறைபோல் இல்லாமல், இந்த முறை தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான மோதலும், விரிசலும் அதிகமாகியுள்ளதால், இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவார்களா என்பது போகபோக தான் தெரியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x