Published : 12 Apr 2025 01:00 PM
Last Updated : 12 Apr 2025 01:00 PM

தேஜ கூட்டணியில் அமமுக தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்: டிடிவி தினகரன்

சென்னை: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார். ஒற்றைத் தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஓரணியில் திரண்டுள்ளோம்.” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

‘‘அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் 2026 தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை சந்திக்க உள்​ளோம். பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமைக்​கும்’’ என்று சென்னை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று அறிவித்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் தொட்டே இடம்பெற்றுள்ள அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆஞ்சியியோகிராம் பரிசோதனை முடிவுகள் எனது இதயம் பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளது. நலமுடன் உள்ளேன். இன்னும் 30 ஆண்டுகளாவது அரசியலில் ஈடுபடும் ஆரோக்கியம் இருக்கிறது.

நேற்றைய அமித் ஷா செய்தியாளர் சந்திப்பு பற்றிய கேள்விகளோடு வந்துள்ளீர்கள். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த தேஜ கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றே நான் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் தொட்டு வலியுறுத்தி வருகிறேன். அது தான் இப்போது நடக்கிறது.

தேஜ கூட்டணி கடல் அலை போன்றது, நாங்கள் மோடி அணியில் இருக்கிறோம். தேஜ கூட்டணியில் உள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒரே குறிக்கோளோடு செயல்படுகிறோம். இந்தத் தருணத்தில் தேஜ கூட்டணியில் தான் அமமுக தொடர்கிறது. அதிமுக கூட்டணிக்கு வந்ததால் அமமுக என்னவாகும்?, ஓபிஎஸ் கைவிடப்பட்டாரா? என்பதெல்லாம் வெறும் ஊகங்கள். நாங்கள் எல்லோரும் மோடியின் கரங்களை வலுப்படுத்த அந்தக் கூட்டணிக்குச் சென்றோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பில்லை, அது ஏற்பட சிலருக்கு பரந்த மனநிலை இல்லை. ஆகையால் ஓரணியில் திரள வேண்டும் என்றே சொல்லிவந்தோம். ஒரு தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் ஓரணியில் ஒற்றைக் குறிக்கோளுடன் திரண்டுள்ளோம்.

2021-ம் ஆண்டு சரியான கூட்டணி அமைந்திருந்தால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. இந்த முறை அமித் ஷா, மோடி அதை சரியாகக் கையாள்வார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x