Published : 12 Apr 2025 09:32 AM
Last Updated : 12 Apr 2025 09:32 AM
“பொது இடங்களில் கழகத்தினர் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதை கழக நன்மைக்காக மட்டும் சொல்லவில்லை. உங்களுடைய நன்மைக்காகவும் தான் சொல்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும் திமுக-வினர் திருந்துவதாக இல்லை.
இதோ, மூத்த அமைச்சர் பொன்முடி தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில் இந்து மத நம்பிக்கை மற்றும் பெண்கள் குறித்து அருவருக்கத் தக்க வகையில் பேசி மீண்டும் ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார். பொன்முடியின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதுமே முதல் ஆளாக பொன்முடிக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்து கண்டித்தார் திமுக எம்பி-யான கனிமொழி.
இதையடுத்து, பொன்முடியை திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் ஸ்டாலின். “இதெல்லாம் போதாது, அவரை அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும்” என இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பாஜக ஐடி விங், இதை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இந்தியா முழுக்க பரப்பும் வேலையில் இறங்கி இருப்பதால் பொன்முடிக்கு எதிராக வழக்குகளும் பாயலாம் என்கிறார்கள்.
முதல்வரிடமும் துணை முதல்வரிடம் நினைத்த நேரத்தில் அலைபேசியில் பேசுமளவுக்கு செல்வாக்கு பெற்றவர் அமைச்சர் பொன்முடி. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும் மனதில் பட்டதை பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பட்டெனப் பேசிவிடக் கூடியவர். தன்னோடு பயணிக்கும் கட்சிக்காரர் மீது ஏதாவது புகார் வந்தால் காரில் போகும்போதே அதுபற்றி அவரிடம் விசாரித்து, அவர் சொல்லும் பதிலில் திருப்தி இல்லை என்றால் நடு வழியிலேயே காரிலிருந்து இறக்கிவிட்டுச் செல்லவும் தயங்காதவர்.
இந்த நிலையில், திமுக பொதுக்குழு கூட்டத்தில், “கட்சியினர் பொது இடங்களில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது அதே மேடையில் இருந்த பொன்முடி சிரித்துக் கொண்டிருந்த காட்சி வைரலானது. அதேபோல் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது, அவரை கைகாட்டி பேசி சிரித்ததும் வைரலானது. அதன் பிறகு தான் பொன்முடி வழக்குச் சிக்கலுக்கு ஆளானார். அவரிடமிருந்த உயர் கல்வித் துறையும் கைவிட்டுப் போனது.
பொதுவாக அரசு விழாக்களில் கலகலப்பாக பேசியே பழகிய பொன்முடி, கிராம மக்கள் மத்தியில், ‘மகளிர் விடியல் பயணத்தை ‘ஓசி பஸ்’ எனப் பேசி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவரே அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதேபோல் முன்பு விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டபோது வாக்குக் கேட்கச் சென்ற இடத்தில் பெண்களிடம்.
“என்னைப் பார்க்கத்தானே வந்தீங்க?” என்று கேட்டு வைத்தார். கிராமசபை கூட்டத்தில் பெண் ஒருவரை “நீ எஸ்சி தானே?” எனக் கேட்டு சங்கடத்தில் சிக்கினார். தனது திருக்கோவிலூர் தொகுதிக்குள் குறைகளைச் சொன்ன பெண்களிடம், “நீ எனக்கா ஓட்டுப் போட்டே” என்று அவர் கேட்டதும் வம்பானது.
பொன்முடி வீட்டுக்குப் போகும் யாரும் அவர் எதிரே நாற்காலியில் அமரக் கூட யோசிப்பார்கள் என்பார்கள். இதையெல்லாம் பட்டியல் போடும் விழுப்புரம் திமுக காரர்கள், “அவருக்கு வாய்ல வாஸ்து சரியில்லீங்க” என்று அவர் பாணியிலேயே இப்போது கிண்டலடிக்கிறார்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டு விழா திமுக இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.
இதில் பொன்முடி பேசிய அருவருக்கத்தக்க அந்த பேச்சானது இப்போது அவரது கட்சிப் பதவிக்கே உலை வைத்திருக்கிறது. இதன் மூலம் முதல் முறையாக கட்சித் தலைமையின் நடவடிக்கைக்கு உள்ளாகி சறுக்கலைச் சந்தித்திருக்கிறார் பொன்முடி. தலைமை இந்த நடவடிக்கையை எடுக்கும் முன்னதாக கட்சியின் இன்னொரு துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி துணிச்சலாக பொன்முடியின் செயலைக் கண்டித்ததன் மூலம் தனது இமேஜை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
ஒருசமயம், தனது அமைச்சர்கள் மத்தியில் பேசிய ஜெயலலிதா, “பொன்முடியைப் போல உங்களில் யாராவது சட்டமன்றத்தில் பேசுகிறீர்களா?” என சிலாகித்துக் கேட்டதாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட பொன்முடி, இப்போது பொறுப்பின்றி பேசக்கூடாததைப் பேசி பொறுப்பை இழந்திருக்கிறார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT