Published : 12 Apr 2025 06:58 AM
Last Updated : 12 Apr 2025 06:58 AM
சென்னை: தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. “வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சந்திக்க உள்ளோம்” என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்வதற்காக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் அக்கட்சி நிர்வாகிகளுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம். வரும் தேர்தலின் போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும் போட்டியிட இருக்கிறோம்.
வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு ஒருபோதும் இருக்காது. கூட்டணியில் இணைவதன் மூலம் இருதரப்புக்குமே பலனிருக்கிறது. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதும், வெற்றி பெற்ற பிறகு ஆட்சியில் எத்தகைய பங்கு என்பதும் பின்னர் தான் பேசப்படும்.
சனாதனம், மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை போன்ற பல்வேறு பிரச்சினைகளை திமுக தொடர்ந்து எழுப்பி வருகிறது. ஆட்சியில் இருக்கும் ஊழல், மோசடி போன்ற முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இவ்வாறு பிரச்சினைகளை எழுப்புகின்றனர். ஊழல், சட்டம் ஒழுங்கு ஆபத்து, பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவையே தேர்தலில் பேசுபொருளாக இருக்கும். தேர்தலில் திமுக மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் ரூ.39,775 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. ரூ.5,800 கோடி அளவுக்கு மணல் கொள்ளை, ரூ.4,400 கோடி மின்துறையில் ஊழல், எல்காட் துறையில் பங்கு விற்பனை மோசடி ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல், போக்குவரத்துத் துறையில் ரூ.2 ஆயிரம் கோடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ரூபாய் ஆயிரம் கோடி, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியதில் ரூ.450 கோடி, அரசு வேலைக்கு பணம் வாங்குவது, செம்மண் கடத்தல், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காகவே நீட் விவகாரத்தை திமுக பயன்படுத்துகிறது. நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவான கருத்து ஏற்பட்ட பிறகே தேர்தலை சந்திப்போம். தமிழக மக்களை சந்திக்கும் போது அவர்கள் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்வோம். திமுக போல் மடைமாற்றம் செய்ய மாட்டோம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமித்ஷா அளித்த பதில்:
கேள்வி: அரசியல் ரீதியாக தமிழகத்தை பிரச்சினைக்குரிய மாநிலமாக பாஜக கருதுகிறதா?
பதில்: தமிழகத்தை பிரச்சினைக்குரியதாக நாங்கள் கருதியதில்லை. தமிழ் மொழி, தமிழர்கள் மற்றும் தமிழகத்தை பாஜக கவுரவமாக கருதுகிறது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். மோடி காசி தமிழ் சங்கமத்தையும், குஜராத் சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தையும் நிறுவினார். கேலோ இந்தியா போட்டியில் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை மோடி சேர்த்தார்.
செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவியவரும் பிரதமர் மோடி தான். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதோடு, திருக்குறள் 63 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாரதியாரின் படைப்புகளை அத்தனை மொழிகளிலும் வௌியிட்டிருக்கிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் எழுத வைத்தார். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை தேர்வுகளை இப்போது தமிழில் எழுத முடிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான பாடங்கள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடத் திட்டத்தை மொழிபெயர்த்து தருமாறு 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கிறேன். அதனை முதல்வர் ஸ்டாலின் செய்ய மறுக்கிறார். தமிழ் மொழிக்காக திமுக என்ன செய்தது? இதனை தமிழக மக்களுக்கு திமுக தெரிவிக்க வேண்டும்.
கேள்வி: பாஜகவின் மாநில தலைவர் மாற்றப்பட்ட பிறகுதான் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறதா?
பதில்: இது கொஞ்சம் கூட உண்மை இல்லை. இன்றைக்கும் அண்ணாமலை தான் மாநில தலைவர். அதனால்தான் அவர் எனது அருகில் அமர்ந்திருக்கிறார்.
கேள்வி: வர உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை முக்கிய பங்கு வகிப்பாரா? கட்சியின் தேசிய அளவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா?
பதில்: சிலவற்றை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் கட்சியை நன்றாக வழி நடத்திக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அதிமுக நிர்வாகிகள் முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT