Published : 11 Apr 2025 03:58 PM
Last Updated : 11 Apr 2025 03:58 PM

பாஜக மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்திரன்! - பின்புலம் என்ன?

நயினார் நாகேந்திரன் | கோப்புப்படம்

சென்னை: தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்திரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​ப மனு தாக்​கல் இன்று (ஏப்.11) நடை​பெற்றது. தமிழக பாஜக​வில் மாநில தலைவர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டிருந்தது. அதன்​படி, இவ்​விரு பதவிகளுக்கு போட்​டி​யிடு​பவர்​கள் விருப்​ப மனு தாக்​கல் செய்​ய​லாம் என தமிழக பாஜக தேர்​தல் அதி​காரி எம்​.சக்​கர​வர்த்தி அறி​வித்​திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை இன்று மதி​யம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்​டி​யிட விருப்​ப​முள்​ளவர்​கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தார். அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மூன்று பரு​வம் தீவிர உறுப்​பின​ராக​வும் மற்​றும் குறைந்​தது 10 ஆண்​டு​கள் அடிப்​படை உறுப்​பின​ராக​வும் உள்​ளவர் மாநில தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட தகுதி பெறு​வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திரா, சிக்கிம் போன்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த விதியை தளர்த்தி, நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக தேர்வு செய்வதாக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை (ஏப்.12) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கவனம் ஈர்த்த பேனர்... - முன்னதாக, சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இதற்காக, அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று தலைப்பிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்காத நிலையில், அந்த பேனர் மாற்றப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி என குறிப்பிடப்பட்டிருந்த அந்த பேனரில் நயினார் நாகேந்திரனின் படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை இல்லை - கடந்த மாதம் டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு, ‘மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை,’ என செய்தியாளர்களிடம் திட்டவட்டமாக கூறியிருந்தார். ஆனாலும், பாஜக தொண்டர்கள் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றக் கூடாது என அவருக்கு தொடர்ந்து ஆதரவு குரல் எழுப்பி வந்தனர். அதேவேளையில், நயினார் நாகேந்திரன் டெல்லியிலேயே முகாமிட்டிருந்ததால், அடுத்த மாநில தலைவர் அவர் தான் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தியை நேற்று சந்தித்த அண்ணாமலை, அதன்பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சியிடம், ‘மாநில தலைவர் தேர்தலுக்கான போட்டியில் நான் விருப்பமனு தாக்கல் செய்யப் போவதில்லை. போட்டியிட போவதும் இல்லை,’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம், மாநில தலைவருக்கான தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை என்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

பின்புலம் என்ன? - தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக பாஜக தலைவராக தற்போது இருக்கும் அண்ணாமலை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் காட்சிகளும் தமிழக பாஜகவில் அரங்கேறின.

சமீபத்தில், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் மேடையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்ணவ், முருகன், தமிழக அமைச்சர்கள், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்பிக்கள் நவாஸ்கனி, தர்மர் ஆகியோர் இருந்தனர். திடீரென சட்டப்பேரவைத் பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மேடை ஏற்றப்பட்டார். இது விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

எப்போதும் பிரதமர் விழாவில் உடனிருக்கும் அண்ணாமலை, பிரதமரை மண்டபம் முகாமில் வரவேற்றுவிட்டு, பிரதமருடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார். பின்னர் மதுரைக்கு திரும்பிவிட்டார். பாஜக எம்எல்ஏக்களில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் பார்த்தால் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து பாஜகவில் பயணிக்கும் காந்தியை தான் மேடை ஏற்றியிருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது நெல்லையை தொகுதி எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் மேடை ஏற்றப்பட்டது அவருக்கு சிறப்பு முக்கியத்துவமாக அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதிலிருந்து பாஜக அடுத்த தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் முந்துவது உறுதியானதும் கவனிக்கத்தக்கது.

போஸ்டர் பரபரப்பு: பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட வேண்டுமெனில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமாலையை நீட்டிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அண்ணாமலையை வேறு பதவிக்கு மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.

இதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இதன் உச்சமாக, பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக உள்ள சரவணன் “வேண்டும்... வேண்டும்... அண்ணாமலை வேண்டும், வேண்டாம்... வேண்டாம்... அதிமுக கூட்டணி வேண்டாம்...” என்ற சுவரொட்டிகளை முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் ஒட்டி, தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாஜக மாவட்டச் செயலாளர் சரவணனிடம் கூறும்போது, “கடுமையாக உழைத்து, பாஜகவை வளர்த்தார் அண்ணாமலை. அவரது அரசியல் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. திமுகவை கடுமையாக எதிர்க்க அவர் தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக நீடிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக தொடர்ந்து வளர வேண்டுமெனில் தலைவராக அண்ணாமலை நீடிக்க வேண்டும். இதை கட்சித் தலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். இதை வெளிப்படுத்தும் வகையில்தான் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளேன்” என்றது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x