Last Updated : 11 Apr, 2025 10:53 AM

 

Published : 11 Apr 2025 10:53 AM
Last Updated : 11 Apr 2025 10:53 AM

கச்சத்தீவை மீட்பதால் மட்டும் மீனவர்கள் பிரச்சினை தீருமா?

தேர்தல் நெருங்குவதாலோ என்னவோ மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு கச்சத்தீவு விவகாரம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. கச்​சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த கதை ஒருபக்​கமிருக்க... கச்சத்தீவை மீட்டு​விட்டால் ஒட்டுமொத்த தமிழக மீனவர்​களின் பிரச்சினையும் ஒரே இரவில் முடிவுக்கு வந்து​விடும் என்பது போல் அனைத்துக் கட்சிகளும் பேசுகின்றன. ஆனால், கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்​களுக்கு விடியலைத் தராது என்பதே கள யதார்த்தம் என்கிறார்கள்.

1974-ம் ஆண்டு ஜூன் 26-ல் போடப்பட்ட முதல் ஒப்பந்​தத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக்​கொடுக்​கப்​பட்டது. ஆனால், அந்த ஒப்பந்​தத்தின் 6-வது பிரிவில், ‘இரு நாட்டு மீனவர்​களும் கடல் எல்லை கட்டுப்​பாடுகள் இன்றி இரண்டு நாட்டு கடற் பிராந்​தி​யத்​துக்​குள்ளும் சென்றுவர அனுமதிக்​கப்​படு​வார்கள்’ என்ற ஷரத்தும் சேர்க்​கப்​பட்டது. அதேசமயம் 1976 மார்ச் 23-ல் கையெழுத்தான இரண்டாவது ஒப்பந்​தத்​தில், இரண்டு நாடுகளுக்​குமான கடல் எல்லைகள் வரையறுக்​கப்​பட்​டதுடன் ‘இரண்டு நாட்டினரும் தங்களுக்கு உரிமையான கடற் பகுதியில் இறையாண்மை உடையவர்கள்’ என்ற ஷரத்து சேர்க்​கப்​பட்டது.

இதுதான் தமிழக மீனவர்கள் இன்று அனுபவித்து வரும் பிரச்சினை​களுக்கு மூல காரணம். புதிய ஒப்பந்​தத்தின் மூலம், முந்தைய ஒப்பந்​தத்தில் இரு நாட்டு கடல் பிராந்​தி​யத்​திலும் மீனவர்​களுக்கு வழங்கப்​பட்​டிருந்த மீன் பிடிக்கும் சலுகைகள் மறுக்​கப்​பட்டன. ஆனால் ஒப்பந்தம் இப்படிச் சொன்னாலும்கூட, இரு நாட்டு மீனவர்​களும், தங்களுக்குள் இருந்த பரஸ்பர உறவு மற்றும் நட்பு காரணமாக, இரு நாட்டு கடல் பிராந்​தி​யத்​துக்​குள்ளும் சுதந்​திர​மாகச் சென்று மீன் பிடித்து வந்தனர்.

அவர்களின் இந்த ஒற்றுமைக்கு உலை வைத்தது இலங்கையில் நடந்த உள்நாட்டு போர். அதன் விளைவாக, 13.7.1983-ல் ராமநாத​புரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் முதன் முதலாக இலங்கை கடற்படை​யினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகினர். இதில் 4 மீனவர்கள் படுகாயமடைந்​தனர். ஒருவர் உயிரிழந்​தார். அன்றைக்கு தொடங்கிய இலங்கைக் கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இன்னமும் நின்ற​பாடில்லை.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் கச்சத்தீவு பகுதியில் மட்டுமே நடந்ததோ, நடப்பவையோ அல்ல. கச்சத்தீவு பகுதிக்கு வெகு தொலைவில் உள்ள புதுக்​கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு​துறை, காரைக்கால் ஆகிய மாவட்ட மீனவர்​களும் பெருமளவில் பாதிக்​கப்​பட்​டிருக்​கிறார்கள். ஆக, தமிழக மீனவர்​களுக்கான தீர்வு என்பது கச்சத்​தீவுக்கு அப்பால் உள்ளது.

டாக்டர் குமரவேலு

இதுகுறித்து நம்மிடம் பேசிய தேசிய மீனவர் பேரவையின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் குமரவேலு, “கச்சத்தீவு நம்முடைய மண். அதை மீட்பது என்பது நமது கவுரவ பிரச்சினை. ஆனால், அது மட்டுமே நமது மீனவர்​களின் பிரச்சினைக்கு தீர்வைத் தந்து​வி​டாது. காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பெரும்​பகு​தியான மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டிய பகுதி​களில் மீன்பிடிக்கச் செல்லும் வாய்ப்பு கிடையாது.

1974 ஒப்பந்​தத்​தின்படி எல்லை வரையறுத்துக் கொடுக்​கப்பட்ட இலங்கை கடல் பகுதியை ஒட்டிய கடல் எல்லையில் தான் நமது மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டிய சூழல் இருக்​கிறது. அங்கு தான் மீன் வளமும் இருக்​கிறது. ஆழம் நிறைந்த பகுதியும் துவங்கு​கிறது.

இலங்கை கடற் பகுதியை ஒட்டி மீன் பிடிக்​காமல் இருப்பதை தவிர்க்கவே இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கையின் வடக்குப் பகுதிக்​கும், கிழக்கு பகுதிக்கும் சென்று மீன் பிடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அது ஆழ்கடல் மீன்பிடிப்​புக்கு உகந்த மீன் வளம் நிறைந்த பகுதி​யாகும். ஆனால், கச்சத்தீவு பகுதி என்பது மீன்பிடிக்க மிகவும் முக்கி​யத்துவம் வாய்ந்த பகுதி அல்ல. எனவே, நமது மீனவர்கள் பிரச்சினைக்கான தீர்வு கச்சத்தீவு மட்டுமல்ல.

இரு நாட்டு மீனவர்​களும் பரஸ்பரம் கடல் எல்லைகளைக் கடந்து, இரு நாடுகளின் கடல் பரப்பிலும் மீன்பிடிப்​ப​தற்கான நிரந்​தரமான புதிய ஒப்பந்​தத்தை உருவாக்குவது மட்டுமே நமது மீனவர்​களுக்கும் இலங்கை மீனவர்​களுக்​குமான பிரச்சினைகளை தீர்க்க ஒரே வழி. அது ஒன்றுதான் இத்தனை மாவட்ட மீனவர்​களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழியு​மாகும்” என்றார். பிரதமர் மோடி கச்சத்தீவை இலங்கை​யிடம் 50 வருட குத்தகைக்கு எடுக்கப் போகிறார் என்று செய்திகள் வரும் நிலையில், டாக்டர் குமரவேலு சொல்லும் இந்த உபாயத்தையும் கவனத்தில் கொண்டால் நல்லது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x