Last Updated : 11 Apr, 2025 10:04 AM

3  

Published : 11 Apr 2025 10:04 AM
Last Updated : 11 Apr 2025 10:04 AM

என் கட்சிக்கு நானே இனி தலைவர்! - ராமதாஸ் அதிரடி அறிவிப்பின் பின்னணி

ராமதாஸ், அன்புமணி

கடந்த டிசம்பரில் நடந்த பாமக-வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளராக இருந்த தனது பேரன் முகுந்தனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். இதற்கு, அந்த மேடையிலேயே ஆட்சேபம் தெரிவித்தார் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பார்த்து ஆவேசமான ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கலைன்னா, யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி” என்றார். இதற்கும் மாற்றுக் கருத்துச் சொன்ன அன்புமணி, சென்னையில் தனியாக அலுவலகம் திறந்திருப்பதாகவும் தன்னை சந்திக்க நினைப்பவர்கள் அங்கு வந்து தன்னைச் சந்திக்கலாம் எனவும் அறிவித்தார்.

இந்தச் சம்பவத்​துக்குப் பிறகு அன்புமணி ஆதரவாளர்கள், ராமதாஸ் ஆதரவாளார்கள், முகுந்தன் ஆதரவாளர்கள் என ஆளாளுக்கு பிரிந்து தங்கள் தலைவரை முன்னிலைப்​படுத்தி பேனர்களை வைத்தனர். முன்னதாக, அன்புமணி பாமக-வுக்கு தலைவரான போது அவரிடம் இருந்த இளைஞர் சங்க தலைவர் பதவியை ஜி.கே.மணியின் மகன் தமிழ்​குமரனுக்கு ராமதாஸ் வழங்கி​னார்.

ஆனால், தன்னால் தன்னிச்​சையாக செயல்பட முடியாமல் போனதால் அடுத்த சில மாதங்​களிலேயே பொறுப்பை ராஜினாமா செய்தார் தமிழ்​குமரன். இதனையடுத்தே பொதுக்​குழுவில் தனது பேரன் முகுந்தன் பரசுராமனை இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். ஆனால், அவராலும் தன்னிச்​சையாக செயல்​பட​முடியாத நிலையில், ஆதரவாளர்களை மட்டும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தார்.

இந்நிலையில் தான், அன்புமணியை பாமக-வுக்கு செயல் தலைவராக்கி தன்னையே மீண்டும் தலைவராக அறிவித்​திருக்​கிறார் ராமதாஸ். அய்யாவின் இந்த அதிரடி முடிவு குறித்து நம்மிடம் பேசிய பாமக தலைமை நிலைய நிர்வாகிகள் சிலர், “அண்மைக் காலமாகவே சின்ன​வரின் செயல்​பாடு​களில் அய்யா​வுக்கு அவ்வளவாய் திருப்தி இல்லை. வக்பு வாரிய சட்டத்​திருத்த மசோதா ராஜ்ய சபாவில் கொண்டு​வரப்பட்ட போது அன்புமணி அதில் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வார் என எதிர்​பார்க்​கப்​பட்டது.

ஆனால் அவர், அந்தக் கூட்டத்​திற்கே செல்ல​வில்லை. இதில் அய்யா ரொம்பவே அப்செட். ஏற்கெனவே இளைஞர் சங்க தலைவர் பதவி விவகாரத்தில் பொதுக்​குழுவில் அத்தனை பேர் மத்தியில் அன்புமணி விமர்சனம் செய்ததும் அய்யாவை ரொம்பவே மன உளைச்​சலுக்கு ஆளாக்​கி​விட்டது. அதனால் தான் கட்சியை தனது கட்டுப்​பாட்​டுக்குள் வைத்துக் கொள்ள இந்த அதிரடி முடிவை எடுத்​துள்​ளார். இனி கூட்டணி பேச்சு​வார்த்தை, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை அய்யா நினைத்​த​ படிதான் நடக்கும்” என்றனர்.

இதுகுறித்து ராமதாஸிடம் கேட்டதற்கு, “தலைவர் பதவி மாற்றம் ஏன் என்பதை இப்போதைக்குச் சொல்ல​முடி​யாது. பாமக-வை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சியில் முக்கி​யத்​துவம் இல்லாமல் இருக்கும் முன்னாள் எம்எல்​ஏ-க்கள், எம்பி-க்கள் பாமக-வுக்கு வருவதாக இருந்தால் வருபவர்களை பொறுத்து அவர்களை இணைக்​கலாமா வேண்டாமா என அப்போதைக்கு முடிவெடுக்​கப்​படும்” என்றார்.

கடந்த சில மாதங்​களுக்கு முன்பு, இளைஞர் சங்கப் பதவியை ஏற்கச் சொல்லி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை பாமக தரப்பில் அணுகிய​தாகச் சொல்லப்​பட்டது. அதற்கு, தான் பாமக-வை விட்டு வெகு தூரம் சென்று​விட்டதாக வேல்முருகன் சொன்ன​தாகவும் ஒரு தகவல். இந்த நிலையில், அண்மையில் பாமக நிழல் நிதிநிலை அறிக்​கையின் நகலை பாமக-​வினர் வேல்முரு​க​னிடமும் வழங்கினர். இது குறித்து ராமதாஸிடம் கேட்டதற்கு, “சட்டமன்ற உறுப்​பினர் என்ற முறையில் பாமக-வின் நிழல் நிதிநிலை அறிக்கை அவருக்கு வழங்கப்​பட்டது” என்றார்.

இளைஞர் சங்கத் தலைவர் பதவிதான் இத்தனைக்கும் காரணமா என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்த போது, “பாமக-வில் இளைஞர்களை சுண்டி இழுத்து வைத்திருந்த காடுவெட்டி ஜெ.குரு மறைந்​தார். மற்றொருவரான வேல்முருகன் தனிக்​கட்சியை தொடங்​கி​விட்​டார்.

அவரை மீண்டும் பாமக-வில் இணைத்து இளைஞர் சங்கத்​தலைவர் பதவியை தரலாமா என ஒருயோசனை உருவானபோது தலைமைக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இனியும் இதுபோல இழுபறிகள் இருக்கக் கூடாது என்பதால் தான் தலைவர் பதவியை தானே எடுத்​துக்​கொண்​டு​விட்டார் ராமதாஸ்” என்று சொன்னார்கள்.

சென்னைக்கு வரும் அமித் ஷாவை பாமக தலைவராக அன்புமணி சந்திக்க இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடானது அன்புமணியை தலைவர் பதவியிலிருந்தே நீக்குமளவுக்கு போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மற்ற தலைவர்​களெல்லாம் தமது அரசியல் வாரிசுகளை முன்னோக்கி உயர்த்திக் கொண்டிருக்க, ராமதாஸ் தனது வாரிசை பின்​னோக்கி இழுத்​திருக்​கி​றார். இது பாமக-வுக்குள் எத்தகைய தாக்​கத்தை உண்​டாக்கப் போகிறது என்பதை பொறுத்​திருந்து தான் பார்க்க வேண்​டும்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x