Published : 11 Apr 2025 06:40 AM
Last Updated : 11 Apr 2025 06:40 AM
பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பாமகவினரிடையே உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சாதி வாரி கணக்கெடுப்பு, அரசுப் பள்ளிகளின் மேம்பாடு, ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் மருத்துவப் பணியாற்றிக் கொண்டே, கிராமங்களில் சமூகப் பணியாற்றி, மக்கள் மனதில் இடம்பிடித்தேன். பேருந்து, மாட்டு வண்டி, மிதிவண்டியில் பயணித்தை மக்களை சென்றடைந்தேன். 1987-ல் சாலை மறியல் போராட்டம் நடத்தி 21 பேரை இழந்தேன். 1989-ல் பாமகவை தொடங்கினேன். 95 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தேன். பின்னர், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பெற்றேன். கட்சியின் மூலம் மத்திய அமைச்சர் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதி வரை பெற்றோம். இவையெல்லாம் என் சாதனைகள்.
உரிமைப் போராட்டங்களில் கைதாகி, பாளையங்கோட்டை சிறை தவிர மற்ற மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டேன். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பாமகவினரின் வேண்டுதலால் உயிர் பிழைத்தேன்.
நான் ஒருபோதும் சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்ல ஆசைப்பட்டதில்லை, இனியும் ஆசைபடப் போவதில்லை. லட்சக்கணக்கான பாட்டாளி மக்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறேன். இதைவிட உயர்ந்த பதவி வேறேதும் உண்டா?
இப்போதும் தினமும் நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறேன். கட்சி மற்றும் சங்கத்தைச் சேர்ந்த புதிய தலைமுறையினர், எனது தலைமையின் கீழ் சிறிதுகாலம் பணியாற்ற வேண்டுமென்ற அன்புக் கட்டளையின் பேரிலும், 2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டும், பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன். அதற்காக கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்யக் கருதி, முழு மனதுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, பாமக நிறுவனரான நானே, இனி தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்; அன்புமணியை செயல் தலைவராக நியமிக்கிறேன். கவுரவத் தலைவராக ஜி.கே.மணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள். மே 11-ம் மாமல்லபுரம் மாநாடு வெற்றிகரமாக நடக்க அனைவரும் உழைப்போம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
சீல் செய்யப்பட்ட கவரில்... முன்னதாக, சீல் செய்யப்பட்ட கவர் ஒன்றை பிரித்த ராமதாஸ், தனது லெட்டர் ஹெட்டில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த கடிதத்தை எடுத்து வாசித்தார். முன்னதாக, அருகிலிருந்த தலைமை நிலையச் செயலாளர் அன்பழகனிடம், "இன்று தேதி 10 தானே? என்று கேட்டுவாரு, அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டார். பின்னர் அதை வாசிக்கத் தொடங்கினார். ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமதாஸ் இல்லம் முன்... பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பை தொடர்ந்து, திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் இல்லம் முன்பு நேற்று பிற்பகல் 30-க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டு, திண்டிவனம் நகர முன்னாள் செயலாளர் ராஜேஷ் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ராமதாஸின் அறிவிப்புக்கு எதிராக முழக்கமிட்டதுடன், மீண்டும் அன்புமணியை தலைவராக அறிவிக்க வலியுறுத்தினர்.
அப்போது அங்கு வந்த விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜெயராஜ் தலைமையிலான பாமகவினர் அங்கிருந்தவர்களிடம் “எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். இதையடுத்து, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர்.
முன்னதாக, பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாமகவின் நிரந்தரத் தலைவர் அன்புமணி மட்டும்தான். ராமதாஸ் சொல்லை நாங்கள் எப்போதும் கேட்போம். ஆனால், இந்த விஷயத்தில் அப்படியல்ல. அவரின் வயது முதிர்வைப் பயன்படுத்தி சிலர் பின்னால் இருந்து இயக்கி, தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பாமகவில் உள்ள இளைஞர்களின் வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டார்கள். இது தனிப்பட்ட சுயநலவாதிகளின் சூழ்ச்சிதான்” என்றார்.
விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் தப்பில், “இந்த ஆர்ப்பாட்டம் தேவையற்றது. கட்சியில் இருந்து ஒன்றரை மாதத்துக்கு முன் நீக்கப்பட்ட ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT