Published : 11 Apr 2025 04:57 AM
Last Updated : 11 Apr 2025 04:57 AM

கூட்டணி கட்சி தலைவர்களை அமித் ஷா சந்தித்து பேசுவார்: அண்ணாமலை தகவல்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவைத் தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகளான தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்று, ஆறுதல் தெரிவித்தார். உடன் கட்சி நிர்வாகிகள்.

சென்னை: மாநில தலைவர் நியமனத்துக்கும் அமித் ஷா வருகைக்கும் சம்பந்தமில்லை என்றும், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்களை அமித் ஷா கேட்டறிவார் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் மறைவையொட்டி, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்றார். தமிழிசைக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

உடன், பாஜக மாநில மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோரும் தமிழிசைக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஏப்.11-ம் தேதி மாலை வரை சென்னையில் இருப்பார். அவர் எதற்காக வந்தார் என்பதை, ஏப்.11-ம் தேதி செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மாநில தலைவர் நியமனத்துக்கும், அமித் ஷாவின் வருகைக்கும் சம்பந்தம் இல்லை. கட்சியின் தலைவர்களை சந்திப்பதற்காக தான் அமித் ஷா வருகிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, தமிழகத்தின் அரசியல் நிலவரங்களை கேட்டறிந்து கொள்வார். இது வழக்கமான ஒன்றுதான்.

தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு மாணவர்களுக்கு நல்லதை தான் செய்கிறது. பின் தங்கிய வகுப்பை சார்ந்த மாணவர்கள், நடுத்தர குடும்பத்தை சார்ந்த மாணவர்கள் என பலர், நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லுரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது நீட் விவாதம் என்பது தேவையற்றது.

பாமகவில் நடப்பது அவர்களது உட்கட்சி விவகாரம். அதைப்பற்றி பாஜக கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை ராமதாஸ் வலுப்படுத்துவார். தொடர்ந்து அவர் மக்களுக்காக உழைப்பார். பாஜகவின் தயவுக்காக, அதிமுக தனது ஆதரவை தமிழக மக்களிடம் இழந்து வருவதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.

இது ஒரு அரசியல் பேச்சாக தான் நான் பார்க்கின்றேன். தற்போது திருமாவளவன் எங்கு இருக்கிறார், எந்த கூட்டணியில் இருக்கிறார், அவரால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கிறதா, திமுகவின் ஆட்சியில் திருமாவளவன் சந்தோஷமாக இருக்கிறாரா என்ற கேள்வியை தான் அவரிடம் கேட்க வேண்டும். பட்டியலின மக்களுக்காக திருமாவளவன் கடுமையாக போராடுகிறார் என்றால், பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் தொடர் குற்றங்களை அவர் ஏற்றுக்கொள்வாரா?

இதையெல்லாம் விட்டுவிட்டு, மற்ற கட்சிகளை பற்றியும், கூட்டணியை பற்றியும் தான் திருமாவளவன் அதிகம் கவலைப்படுகிறார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் கவலைப்படுகிறார். இவற்றை பார்க்கும் போது, அவர்களுக்கு பயம் இப்போதே வந்துவிட்டது என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை வீட்டுக்கு நேரில் சென்று குமரி அனந்தன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னை வந்தடைந்த அவர் இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். தொடர்ந்து இன்று(ஏப்.11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்திக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து, மாநில தலைவர் நியமனம், 2026 சட்டப்பேரவை தேர்தல், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதியம் மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு நேரில் சென்று, அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து அவருடன் ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x