Published : 10 Apr 2025 02:00 PM
Last Updated : 10 Apr 2025 02:00 PM
சென்னை: தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாளை (ஏப்.11) காலை சென்னையில், கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசின் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் பாரபட்சம், மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லை என்றால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு நிதி வழங்க மறுப்பது, இந்தி மொழி மற்றும் நீட் தேர்வு திணிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளின் மூலமாக இண்டியா கூட்டணி கட்சியினர் மீது வழக்குகள், சோதனைகள் மற்றும் அடக்குமுறைகள் என சர்வாதிகார, பாசிச முறையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை தமது அதிகார பலத்தால் அச்சுறுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் தமிழகத்திற்கு அடிக்கடி வருகை புரிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு வகைகளில் நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக ஆளுநரை பயன்படுத்தி தமிழக அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார். ஆனால், அதற்கெல்லாம் பாடம் புகட்டுகிற வகையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு முடிவுகட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு இன்று (ஏப்.10) வருகை புரிய இருக்கிறார். அவருக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிற வகையில், எனது தலைமையில் நாளை (ஏப்.11) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற உள்துறை அமைச்சர் அமித்ஷாவே திரும்பிப் போ என்ற கண்டனக் குரல் ஒலிக்கிற வகையில் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT