Published : 10 Apr 2025 05:28 AM
Last Updated : 10 Apr 2025 05:28 AM
சென்னை: சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று, நீட் தேர்வு தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: நுழைவுத் தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கக் கூடியது. அதனால், அதை தவிர்த்து பள்ளிக் கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வை கொண்டு வந்தது. இது நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதிக்கிறது.
நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளைப் பெறுவதற்கான வசதி வாய்ப்பு இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதுதான் நீட் தேர்வின் மாபெரும் அநீதி. இதற்கு எதிராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் சட்ட போராட்டத்தை தொடங்கினோம். நீட்தேர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தோம். அக்குழு பரிந்துரைப்படி, அரசு செயலாளர்களை கொண்ட குழு நீட் விலக்கு சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது.
தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை கடந்த 2021 செப்.13-ம் தேதி நான் முன்மொழிந்தேன். அந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், அரசியல் செய்ய ஆரம்பித்தார். கடந்த 2022 பிப்.1-ம் தேதி திருப்பியனுப்பினார், பிப்.8-ம் தேதி மீண்டும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன்.
தொடர்ந்து, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினேன். அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த தொடர் முயற்சிகளால், ஆளுநர் சட்ட மசோதாவை கடந்த 2022 மே 4-ம் தேதி குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார். அதன்பின், மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற முயற்சி எடுக்கப்பட்டது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை, உள்துறை, உயர்கல்வித்துறைகளுக்கு அனைத்து விளக்கங்களையும் அரசு உடனுக்குடன் வழங்கியது. ஆனால், அவற்றை ஏற்காமல், நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர். நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நமது சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தேவைப்பட்டால் புதிய வழக்கு: தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவுக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், விலக்கை பெற தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இந்த வகையில், நீட் தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்பட்டால், புதிய வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென்றும் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின், துணை முதல்வரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் கட்சி பங்கேற்கவில்லை. திமுக சார்பில், எம்எல்ஏக்கள் பரந்தாமன், எழிலன் மற்றும் செ.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), டி.ராமச்சந்திரன், மாரிமுத்து (இ.கம்யூ), நாகைமாலி, சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூ), சதன்திருமலைக்குமார், பூமிநாதன் (மதிமுக), ஜி.கே.மணி (பாமக), ஜவாஹிருல்லா, அப்துல்சமது (மமக), வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தலைமைச்செயலர் நா.முருகானந்தம் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT