Published : 09 Apr 2025 08:14 PM
Last Updated : 09 Apr 2025 08:14 PM

‘விருப்பம் போல் சோதனை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் கிடையாது’ - டாஸ்மாக் தரப்பில் வாதம்

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய சோதனையின்போது என்னென்ன ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்பது குறித்து அமலாக்கத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறைச் செயலரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது பெண் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த பெண் அதிகாரிகளை அழைத்து வரவில்லை. வழக்கறிஞர்களை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.

இந்த வழக்கில் முக்கிய ஆவணங்களையும், அதிகாரிகளின் மொபைல் போனில் இருந்த தகவல்களையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கில் என்னென்ன ஆவணங்கள் தங்களிடம் உள்ளன என்பதை அமலாக்கத் துறை விளக்க வேண்டும். சோதனையின்போது சில டாஸ்மாக் அதிகாரிகளை அமலாக்கத் துறை தூங்குவதற்குக்கூட அனுமதிக்கவில்லை. உரிய ஆதாரம் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக அமலாக்கத் துறை தனது விருப்பம் போல சோதனை நடத்த அதிகாரம் கிடையாது.

அமலாக்கத் துறை ஒன்றும் நீதியின் பாதுகாவலர் கிடையாது. ஒரு விசாரணை அமைப்புதான். சோதனையின்போது ரகசியம் எனக் கூறி எந்த விவரங்களையும் எங்களுக்கு தரமறுத்த அமலாக்கத் துறை அதிகாரிகள், சோதனை முடிந்தபிறகு மெகா முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருப்பதன் நோக்கமே அதன் பின்னணியை விவரித்து விடும். இந்த சாதாரண சோதனையை ஏதோ புலன் விசாரணை நடத்துவதுபோல அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்,” என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து டாஸ்மாக் தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஏப்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x