Published : 09 Apr 2025 06:04 PM
Last Updated : 09 Apr 2025 06:04 PM

சமரச தீர்வு மையத்தின் 20-ம் ஆண்டு நிறைவு விழா: ஐகோர்ட் நீதிபதிகள் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு!

சமரச தீர்வு மையத்தின் 20-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சென்னை: வழக்குகளின் நிலுவையைக் குறைக்கும் வகையில் சமரச தீர்வு மையத்தின் 20-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சமரச தீர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சட்டப்பூர்வமாக வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரையும் அழைத்து பேசி பரஸ்பரம் சுமுகத் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலர் சமரச தீர்வாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச தீர்வு மையம் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்.9-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 38 மாவட்ட சமரச தீர்வு மையங்களும், 146 தாலுகா அளவிலான சமரச மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொதுமக்களுக்கு சமரச மையம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் தொடக்க நிகழ்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்பிளனேடு நுழைவு வாயில் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், சமரச மையத்தின் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தர், சமரச மைய கமிட்டி உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் அனிதா சுமந்த், ஜி,கே.இளந்திரையன், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ். கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சுதர்சனா சுந்தர், பழனிவேலு, அல்லி உள்ளிட்ட சமரச தீர்வாளர்கள், தமிழ்நாடு சமரச தீ்ர்வு மைய இயக்குநர் கே.பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் டி,.ரமா மற்றும் உதவி பதிவாளர் கே.சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x