Published : 09 Apr 2025 05:10 PM
Last Updated : 09 Apr 2025 05:10 PM
சென்னை: உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச் சங்கத்தினர் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவது போல, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும்; வேலைவாய்ப்பில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; அரசு வேலைவாய்ப்பில் குரூப்-4க்கும் குறைவாக உள்ள வேலை வாய்ப்புக்கான மின்தூக்கி இயக்குபவர், அலுவலக உதவியாளர்கள், அங்கன்வாடி பணிகள், சத்துணவு பணியாளர்கள், ரேஷன் கடை ஆகிய பணியிடங்களில் உயரம் குறைந்த மாற்றத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும்.
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் வீடு திட்டங்களில் முன்னுரிமை அளித்து இலவசமாக வீடு வழங்க வேண்டும் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கத்தினர் சென்னை மாற்றுத்திறனாளி நல இயக்குநரகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஜி.ராகுல், மாநிலச் செயலாளர் கீதா குப்புசாமி உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, மாநிலத் தலைவர் ராகுல் கூறும்போது, “கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளித் துறை செயலர், ஆணையர், இயக்குநர் ஆகிய அதிகாரிகளுடன் பலமுறை கலந்துரையாடல் மேற்கொண்டும், எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எந்த பதிலும் தரப்படவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பார்வையற்றவர்களுக்கு வழங்குவது போல, உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து நகர பேருந்துகளில் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்க சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும். தனியார் நிறுவனங்களில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தம் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, நல்ல முடிவு எடுக்க வேண்டுகிறோம்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT