Published : 09 Apr 2025 04:58 AM
Last Updated : 09 Apr 2025 04:58 AM
சென்னை: ‘‘இன்னும் 9 மாதகாலம் மட்டுமே இந்த ஆட்சி. அதன் பின் எதிர்க்கட்சியாக கூட திமுக வராது. கூட்டணி கட்சிகள் காற்றோடு காற்றாக கரைந்து போகும். எனவே உஷாராக இருக்க வேண்டும்’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சிக்குத் தான் பேச முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி வைக்கும் கோரிக்கைகளை நிராகரித்து, எங்களை பேசுவதற்கு அனுமதிக்காமல், வேறு கட்சி உறுப்பினர்களையும், தலைவர்களையும் மட்டுமே பேச அனுமதிப்பது எந்த வகையில் நியாயம், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் சொன்ன பிறகுதான் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோல் காவிரி குண்டாறு பிரச்சினை குறித்து அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் பேசியது, திருக்கோயில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது எதுவுமே நேரலையில் வரவில்லை. ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பேசும்போது மட்டும் அதை நேரலை செய்கின்றனர். அதிமுகவினரின் கேள்விகளை காட்டாமல் அமைச்சர், முதல்வரின் பதிலை மட்டுமே நேரலை செய்கின்றனர். அது எப்படி மக்களுக்கு புரியும்?
இது சர்வாதிகார போக்காகும். பேரவைத் தலைவர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார். இதை கண்டித்தே கருப்பு சட்டை அணிந்து வந்தோம். முதல்வருக்கு திராணி இருந்தால் எங்களுக்கு பேச வாய்ப்பளித்து, அதற்குரிய பதிலை அவையிலே பதிவு செய்தால் அதை நாங்கள் வரவேற்போம். அதைவிடுத்து எங்களை திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு, விமர்சனம் செய்வது கோழைத்தனமானது.
அதேபோல் நாங்கள் காவி உடைக்கு பதிலாக கருப்பு சட்டை அணிந்து வந்ததை வரவேற்கிறோம் என்கிறார் முதல்வர். கடந்த 1999 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக யாருடன் இணைந்து தேர்தலை சந்தித்தது, எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் விட்டவர், இன்றைக்கு வெள்ளைக் கொடை பிடிக்கிறார். எனவே தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை முதல்வர் உணர வேண்டும்.
இன்னும் 9 மாதம் மட்டுமே இந்த ஆட்சி. அதன் பின் எதிர்க்கட்சியாகக் கூட திமுக வராது. திமுகவைப் போல கூட்டணி கட்சிகளை அடிமையாக வைத்திருக்கும் கட்சி அதிமுக அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாக செயல்பட வேண்டும். அப்போது தான் அந்தந்த கட்சிகள் வளரும். ஆனால் திமுக கூட்டணிக் கட்சிகள் எந்த காலத்திலும் வளராது. எல்லோரும் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டனர். காலப்போக்கில் இந்தக் கூட்டணி கட்சிகள் கற்றோடு காற்றாக கரைந்து போகும். எனவே திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேரவையில் அதிமுக ஆட்சியின்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்டவை குறித்து திமுக உறுப்பினர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு பதில் அளித்து பேச முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜூ ஆகியோருக்கு பேரவை தலைவர் அனுமதி தரவில்லை. இதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT