Published : 09 Apr 2025 04:35 AM
Last Updated : 09 Apr 2025 04:35 AM
சென்னை: ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சட்டப்பேரவையில் அனைத்துகட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பை அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரவையில் பேசிய முதல்வர் இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பெருமிதம் தெரிவித்தார்.
இதையடுத்து உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ஜெ.முகம்மது ஷாநவாஸ் (விசிக), தி.சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), எம்.எச். ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், தமிழக அரசையும், முதல்வரையும் பாராட்டியும் பேசினர்.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி: அகில இந்திய அரசியலுக்கும், அரசியவாதிகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், முதல்வர் இந்த தீர்ப்பை பெற்று தந்துள்ளார். இது முதல்வரின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். தமிழக அரசு இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட முன்வடிவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன்: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து, இந்த பேரவையில் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். முதல்வரை இளம் வயதில் இருந்து தெரியும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மடியில் நான் வளர்ந்தவன். பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த முதல்வரும் செய்யாத சாதனையை முதல்வர் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாநில சுயாட்சிக்கு அடிகோலினார். அவரது மகன் இன்றைக்கு ஆளுநர் தேவையில்லை என்ற அளவுக்கு கொண்டு வந்துள்ளார். இங்குள்ள ஆளுநரைப் பார்த்து தான் மற்ற ஆளுநர்களுக்கு ஆணவம் வந்தது.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு: அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை மட்டும்தான் சட்டப்பேரவையில் வாசிக்கும் உரிமை ஆளுநருக்கு உள்ளது என்பதை, இந்த சட்டப்பேரவைதான், இந்த முதல்வர்தான் இந்தியாவுக்கே வழி காட்டினார். அதேபோல்தான் இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் நீதியை முதல்வர் பெற்று தந்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என அதிமுக ஆட்சி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் கிடந்தது. மீண்டும் இரண்டாவது முறையாக இதே சட்டப்பேரவையில் அந்த பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என்று மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியது இன்றைய முதல்வர்தான். அதற்குக்கூட நன்றி சொல்ல அதிமுக தயக்கம் காட்டுவது வேதனையான விஷயம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சி செய்கின்ற பாஜக ஆகிய இரண்டு கட்சிகளையும் தவிர, மற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் பாராட்டியும், வாழ்த்தியும் பேசி அந்தத் தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.
இந்நேரத்தில், நமது அரசமைப்பு சட்டத்தில் மாநில சட்டப்பேரவைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கக் கூடிய உரிமைகளை நிலைநாட்டிய உச்ச நீதிமன்றத்துக்கு, தமிழக அரசு, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பேரவை முன்னவர் துரைமுருகன் உருக்கத்தோடும், நெகிழ்ச்சியோடும் பேசினார். கருணாநிதி மடியிலே நான் வளர்ந்தவன் என்று அவர் சொன்னார். நீங்கள் சொன்னபோது, நான் எண்ணியது, உங்கள் மடியிலே நான். இவ்வாறு முதல்வர் பேசினார்.
அதிமுகவை ‘ஆளுங்கட்சி’ என்ற முதல்வர்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய தீர்ப்பை வரவேற்று நம்முடைய மகிழ்ச்சியை, அனைத்து கட்சி, மன்னிக்கவும், ஆளுங்கட்சியான அதிமுக தவிர்த்து’’ என்று தவறுதலாக தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி என அப்பாவு மற்றும் திமுக உறுப்பினர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய முதல்வர், ‘‘பதற்றத்தில் இருக்கிறேன். அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன்’’ என்றார்.
மேலும், ‘‘கொள்கையிலே நிச்சயமாக, உறுதியாக இருப்பேன் என்கிற உறுதியோடு, இந்த மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களைத் தவிர, மற்ற அனைவரும் மேசையைத் தட்டி நம்முடைய நன்றியை தெரிவிக்க வேண்டுகிறேன்’’ என்றார். இதையடுத்து, உறுப்பினர்கள் மேசையை தட்டி நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT