Published : 08 Apr 2025 09:58 PM
Last Updated : 08 Apr 2025 09:58 PM

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எத்தகையது? - தலைவர்கள் கருத்து

தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.

‘தமிழக ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியலமைப்பை நீர்த்துப் போகச் செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி’ என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள்:

முதல்வர் ஸ்டாலின்: “வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த சட்டப்பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கியமான சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பியனுப்பினார். அந்த நிலையில் அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம்.

இரண்டாவது முறை சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருந்த போதும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததோடு, அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், தமிழக அரசின் வாதத்தில் இருந்த நியாயத்தை ஏற்று, சட்ட முன்வடிவுகளை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது, அந்த சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று தெரிவித்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். திமுகவின் உயிர் கொள்கையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழகம் போராடியது. தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும்.”

பேரவைத் தலைவர் மு.அப்பாவு: “அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை மட்டும்தான் சட்டப்பேரவையில் வாசிக்கும் உரிமை ஆளுநருக்கு உள்ளது என்பதை, இந்த சட்டப்பேரவைதான், இந்த முதல்வர்தான் இந்தியாவுக்கே வழி காட்டினார். அதேபோல்தான் இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் நீதியை முதல்வர் பெற்று தந்துள்ளார்.”

துணை முதல்வர் உதயநிதி: “மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் மீது ஒற்றையாட்சிக் கட்டமைப்பைத் திணிப்பதற்கான முயற்சிகளை எதிர்ப்பதற்கும் முதல்வர் கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்பில் மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.”

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: “அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.”

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி: “ஆளுநருக்கு எதிரான வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெற்றி, தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி.”

பாமக தலைவர் ராமதாஸ்: “சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று யோசனை வழங்கியது பாமக என்ற வகையில் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்பி, மாணவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்.”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: “ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மிக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேற வேண்டும்.”

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: “மாநில உரிமைகளை நிலைநாட்டி, ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. அரசியலமைப்பு கடமை, பொறுப்புகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்திய ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.”

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: “அரசியல் சாசனத்துக்கும், தமிழக நலன்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் உடனடியாக நீக்க வேண்டும்.”

விசிக தலைவர் திருமாவளவன்: “அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகக் குற்றம் இழைத்த ஆர்.என்.ரவியை, ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அனுமதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும்.”

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: “உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான ஆளுநரை மத்திய அரசே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.”

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: “ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது.”

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: “ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். பல்கலைக்கழகங்களின் வேந்தராக பொறுப்பேற்கும் முதல்வருக்கு பாராட்டுகள்.”

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: “மாநில உரிமைகளை அவமதித்து, சர்வாதிகாரி போல் செயல்பட்டு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி கொடுத்திருப்பது மகிழ்ச்சி. அவரை ஆளுநர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும்.”

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்: “மாநில உரிமை காக்கும், மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம்.”

காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம்: “அரசியல் சாசனத்தில் அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயல்பட்டது தவறு என்ற பல சட்ட வல்லுநர்கள் சுட்டிக் காட்டினர், அவர் பொருட்படுத்தவில்லை. ஆளுநரின் செயல்கள் அரசியல் சாசனப்படி தவறு என்று ஆளுநரும் மத்திய அரசும் இப்போதாவது உணர்ந்தால் மகிழ்ச்சி.”

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழக அரசு இடையிலான வழக்கின் தீ்ரப்பு வெளியான நிலையில், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, திமுக எம்.பி. வில்சன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு இனி ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அமைச்சரவையின் அறிவுரையின்படி நடந்து கொள்ள வேண்டும். சட்டப்பேரவை மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்போது, அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்கள் காலம் தாழ்த்தக் கூடாது. ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருக்கிறார். அந்த வேந்தர் என்ற பதவியில் உட்கார்ந்து கொண்டு, அந்த பல்கலைகழகத்துக்கு துணைவேந்தர் நியமனம் உட்பட எல்லா நடவடிக்கைகளையும் அவர் தடுத்துக் கொண்டு வந்தார். ஆகவே, அந்த வேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை வெளியேற்றி, அதற்கு பதிலாக மாநில அரசு நியமிப்பவர்களே வேந்தராக இருக்க வேண்டும் என்ற மசோதாக்கள் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு காலம் தாழ்த்தி வந்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல், கைதிகள் தொடர்பான கோப்புகள் மீதும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதுபோன்று 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்து அவை இன்று முதல் நடைமுறைக்கு வரும்படியாக உத்தரவிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முதல்வர் உட்பட அமைச்சரவையின் அறிவுரைப்படியே நடந்து கொள்ள வேண்டும். அதைமீறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எங்கெல்லாம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவைப்படுகிறதோ, அந்த காலகட்டத்தில்தான் அவருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியதுடன், கால நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூலம் இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களின் சுயஆட்சியை முதல்வர் நிலைநாட்டி இருக்கிறார். ஆளுநர்கள் இடையூறாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார். இந்த தீர்ப்பு தமிழக ஆளுநருக்கு மட்டுமின்றி, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும்.

இந்த தீர்ப்பின்படி வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டுள்ளார். மசோதாவில் குறிப்பிடப்பட்டவர்கள் தான் வேந்தராக இருக்க முடியும். இந்த தீர்ப்பை எதிர்த்து, மனு போட்டாலும் அதை எதிர்த்து நாங்கள் வாதாடுவோம். ‘நீட்’க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதா மீதான ஒப்புதல் விஷயத்தில் ஆளுநருக்கு எந்த ஆப்ஷனும் கிடையாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் நிச்சயம் ஒப்புதல் தரவேண்டும்.

முதல் முறையாக வரும் மசோதாவைதான் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்ததைக் கூட நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x