Published : 08 Apr 2025 05:22 AM
Last Updated : 08 Apr 2025 05:22 AM
சென்னை: விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதவுக்கு எதிராக விசிக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகளிடம், காணொளி வாயிலாக திருமாவளவன் பேசியதாவது:
பாஜகவை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகள், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து பங்கேற்க வேண்டும். இது கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஆர்ப்பாட்டம் அல்ல. நாட்டு மக்களை ஒருங்கிணைத்து நடத்துகிற போராட்டமாகும். எனவே, விமர்சனம் என்ற பெயரில் மற்ற மதங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பக் கூடாது. எல்லா மதங்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.
மதத்தின் மீதான, மதம் போதிக்கிற கருத்துகள் மீதான பார்வை வேறுபடலாம். விமர்சனங்கள் இருக்கலாம். முரண்பாடு இருக்கலாம். ஆனால், இஸ்லாமிய மதத்தின் வாழ்வாதாரத்துக்கு குரல் கொடுக்கிற சூழலில், இந்து மதத்தை சார்ந்தவர்கள் சங்கடப்படும் வகையில் எந்த கருத்துகளையும் பேசக்கூடாது. இந்து சமூகத்தை சேர்ந்தவர்களை காயப்படுத்தக் கூடாது. அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதில் மட்டும் உறுதியாக இருப்போம்.
அதேநேரம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களை விமர்சனம் என்ற பெயரால், அவமதிக்கும் வகையில் பேசிவிடக் கூடாது. தனிநபர்களாக முரண்பாடு இருந்தாலும், அவர்களின் பதவி பொதுவானது. தனிநபராக அவர்களை விமர்சிக்க உரிமை உள்ளது. அவர்கள் எப்படி இஸ்லாமுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை சொல்லலாம். இந்த அரசியல் தெளிவோடு போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT