Published : 08 Apr 2025 06:40 AM
Last Updated : 08 Apr 2025 06:40 AM

ஒக்கியம் துரைப்பாக்கத்தில் முதல்வர் திறனகம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ரூ.2 கோடி செலவில் முதல்வர் திறனகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பதிலளித்துப் பேசியதாவது:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றியவர் தமிழக முதல்வர். இந்த வாரியம் மூலம் சென்னை மற்றும் இதர பகுதிகளில் 467 இடங்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்பது முதல்வரின் தொலைநோக்கு திட்டம். அதை செயல்படுத்த அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 53 ஆயிரம் வீடுகள் தேவைப்படும் என கணக்கிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 41 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

அதில் 74 ஆயிரத்து 597 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 66 ஆயிரத்து 923 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ரூ.704 கோடியே 62 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 6,058 அடுக்குமாடி குடியிருப்புகள் ஓரிரு மாதங்களில் முதல்வரால் திறக்கப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்படும்.

பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 6 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 96 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை மத்திய அரசு ஒரு வீட்டுக்கு ரூ.1.5 லட்சமும் மாநில அரசு ரூ.60 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.2.10 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிதி ஏழை மக்களுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் தமிழக முதல்வர் பரிசீலித்து மாநில அரசின் மானியத்தை ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி ஒரு வீட்டுக்கு ரூ.2.5 லட்சமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 62,197 அடுக்குமாடி குடியிருப்புகளில் ரூ.170 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு ரூ.54.4 கோடி செலவில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ஒக்கியம் துரைப்பாக்கம் -கண்ணகி நகர் பகுதியில் ரூ.2 கோடியில் முதல்வர் திறனகம் ஏற்படுத்தப்படும். பெரும்பாக்கத்தில் ரூ.40 லட்சம் செலவில் பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படும்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் இளம் பெண்களுக்கு ரூ.80 லட்சம் செலவில் நல்வாழ்வு மற்றும் சுகாதாரப் பெட்டிகள் வழங்கப்படும் ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x