Published : 08 Apr 2025 05:09 AM
Last Updated : 08 Apr 2025 05:09 AM

பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

சென்னை: நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் வழியில், பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி கேட்டுக் கொண்டார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு கே.தங்கராசு புகைப்படத்தை திறந்துவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திராவிட இயக்கக் கொள்கைகளை சினிமா மூலம் தங்கராசு பரப்பினார். ரத்தக் கண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். முதலில் நாடகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் இக்கதை வெளிவந்தது. அந்த திரைப்படத்தின் மூலம் புரட்சிகரமான கருத்துகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தார்.

தங்கராசுக்கு மட்டுமல்ல அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் பெரியார்தான் வழிகாட்டி. அந்த வரிசையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வந்துள்ளார். சனாதன எதிர்ப்பு குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பினாலும் அதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இப்படி எல்லோரும் திராவிட இயக்கக் கொள்கையில் உறுதியாக இருப்பதற்கு பெரியார் ஊட்டிய உணர்வே காரணம். நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு வழியில் பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கிப் பேசுகையில், “தமிழக வளர்ச்சியை தடுப்பதற்குத்தான் கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு வகையில் முயற்சிக்கிறார்கள்.

தலைசிறந்த பேச்சாளர்களான பட்டுக்கோட்டை அழகிரி, தங்கராசு போன்றவர்கள் இல்லாததால் செந்தமிழன் என்று சொல்லிக் கொண்டு பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் விமர்சிக்கிறார்கள். எதிர்ப்பு எந்த வகையில் வந்தாலும், நாம் விழிப்போடு அதை எதிர்கொள்ள தங்கராசுவின் நூற்றாண்டு விழாவில் நாம் உறுதியேற்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை செயலாளரும் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனுமான எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை செயலாளர் அர.திருவிடம், மார்க்சீய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன், தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத் தலைவர் வழக்கறிஞர் செ.துரைசாமி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட அமைப்பாளர் ச.சண்முகநாதன் வரவேற்றார். திராவிட நாடு ஆசிரியர் ஆர்.பிரசாத் நன்றி கூறினார்.

இவ்விழாவில், கே.தங்கராசுவின் மகள் மண்டோதரி மற்றும் குடும்பத்தினர், மருத்துவர் கவுதமன், வழக்கறிஞர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x