Published : 08 Apr 2025 04:12 AM
Last Updated : 08 Apr 2025 04:12 AM
சென்னை: போலீஸார் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் பசியைப் போக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட காவலர் நல உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவல் ஆணையர், கூடுதல் காவல் ஆணையர்கள் உட்பட பல்வேறு முக்கிய அதிகாரிகளுக்கு அலுவலகம் உள்ளது. மேலும், மத்திய குற்றப்பிரிவு உட்பட பல்வேறு காவல் பிரிவுகளும் 8 மாடி கொண்ட தளத்தில் தனித்தனி அலுவலகத்தில் உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து வார நாட்களில் புகார் அளிக்க பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்களின் பசியைப் போக்கும் வகையில் காவல் ஆணையர் அலுவலக தரை தளத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தினர் உணவகம் அமைத்திருந்தனர். அங்கு தரம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதன் குத்தகை ஒப்பந்தமும் முடிவடைந்தது.
இதையடுத்து, தனியாரை தவிர்த்து போலீஸாரே இந்த உணவகத்தை நடத்த காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, காவலர் நல உணவகம் குளிர்சாதன வசதி உட்பட பல்வேறு வசதிகளுடன் ரூ.14.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. மேலும், போலீஸார் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிடுவதற்காக வசதியாக காவலர் உணவகம் அருகில் புதிய ஷெட் அமைக்கப்பட்டு இருக்கை மற்றும் மேஜை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த உணவகத்தில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, பழரசங்கள், டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை தரமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT