Published : 08 Apr 2025 04:07 AM
Last Updated : 08 Apr 2025 04:07 AM
சென்னை: பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழுக்கள் அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்
பெண்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மூலம் ‘உள்ளூர் புகார் குழு’ அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க ‘உள்ளக புகார் குழுக்கள்’ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இக்குழுவை குறைந்தபட்சம் 4 உறுப்பினர்களை கொண்டு அமைக்க வேண்டும். அதில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நிறுவனங்களிலும் பெண்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும். புகார் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை: இந்த குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும்.
அதேநேரம் புகார் குழுவை அமைக்காமல் இருந்தாலோ, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழுவை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT