Published : 08 Apr 2025 06:18 AM
Last Updated : 08 Apr 2025 06:18 AM

சிவகங்கை | ஆர்டிஓ அலுவலகங்களில் 2 வாரங்களாக தொழில்நுட்ப கோளாறு: ஏராளமானோர் காத்திருப்பு

கோப்புப் படம்

சிவகங்கை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 2 வாரங்களாக தொழில்நுட்பக் கோளாறு பிரச்சினை காரணமாக, தமிழகம் முழுவதும் வாகனப் பதிவுச் சான்றுக்காக பல ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர்.

மோட்டார் வாகனச் சட்டப்படி, புதிய வாகனங்களை பதிவுச் சான்று பெற்ற பின்னரே சாலையில் ஓட்டவேண்டும். இந்தச் சான்றை பெற இணையவழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக வாகன விற்பனை முகவர்களே உரிமையாளர் விவரங்களை பெற்று, உரிய கட்டணங்களை செலுத்தி இணையவழியாக விண்ணப்பம் செய்வர்.

பின்னர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் அல்லது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் புதிய வாகனங்களை ஆய்வு செய்து, பதிவுச் சான்று வழங்க அனுமதிப்பார். தொடர்ந்து, ‘ஸ்மார்ட் கார்டு’-ஆக பதிவுச் சான்று வழங்கப்படும்.

பதிவுச் சான்றுக்கான அட்டை வழங்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மார்ச் 24-ம் தேதியிலிருந்து கடந்த 2 வாரங்களாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவுச்சான்று வழங்கவில்லை. இதனால், புதிதாக வாகனங்களை வாங்கியோர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 2,000 பேருக்கு பதிவுச் சான்று கிடைக்கவில்லை. இதேபோல், மாநிலம் முழுவதும் பல ஆயிரம் பேர் பதிவுச் சான்றுக்காக காத்திருக்கின்றனர்.

தற்காலிக படிவம் விநியோகம்: இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தொழில்நுட்பப் பிரச்சினை மாநிலம் முழுவதும் உள்ளது. ஓரிரு தினங்களில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர். அதுவரை தற்காலிகமாக படிவம்-24 கொடுக்கிறோம். அதை பதிவுச்சான்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x