Published : 08 Apr 2025 02:20 AM
Last Updated : 08 Apr 2025 02:20 AM
சென்னை: சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி அளிக்காததால், தாங்கள் அணிந்திருந்த பேட்ஜை கழற்றிவிட்டு அதிமுக உறுப்பினர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினர். சட்டப்பேரவையில் நேற்று பதாகைகளை காட்டிய அதிமுக உறுப்பினர்கள் 13 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மற்ற அதிமுக உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சிறிது நேரம் கழித்து, கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுவதற்காக அதிமுக உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் பேரவைக்குள் வந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜை கழற்றி வைத்து விட்டு பேசுமாறு பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
நாளை கழற்றுவதாக செங்கோட்டையன் சொன்னதை ஏற்க மறுத்த பேரவை தலைவர் அப்பாவு, பேட்ஜை கழற்றினால்தான் பேசுவதற்கு அனுமதி என்று தெரிவித்தார்.
இதையடுத்து, தான் அணிந்திருந்த பேட்ஜை கழற்றிவிட்டு செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினார். இதேபோல் அதிமுக உறுப்பினர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் பேசினார். பின்னர், அதிமுக உறுப்பினர்கள் பேட்ஜை அணிந்தபடி பேரவைக்குள் வந்தனர். இதற்கு அப்பாவு அனுமதி மறுத்ததால் அவர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT