Published : 08 Apr 2025 01:52 AM
Last Updated : 08 Apr 2025 01:52 AM
சென்னை: டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு டாஸ்மாக் நிறுவனம் கோரிக்கை வைத்தது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:
கடந்த மார்ச் மாதம் அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு விநியோகம் செய்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் அமலாக்கத்துறை 4 நாட்கள் சோதனை நடத்தியது. அப்போது கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம், அரசு நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக ஒரு வழக்கையும், ஊழியர்களைத் துன்புறுத்தியதாக மற்றொரு வழக்கையும் நீதிமன்றத்தில் தொடுத்தது.
மேலும், டாஸ்மாக் தொடர்புடைய மேல் நடவடிக்கைகள் எதுவும் அமலாக்கத் துறை எடுக்கக் கூடாது எனவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களை விடுவித்துக் கொண்டதால், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேறொரு அமர்வை அமர்த்தினார். ஆனால் இவ்வழக்கை எதிர்கொள்ள பயந்து, உச்ச நீதிமன்றத்தை நாடி, வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு டாஸ்மாக் நிறுவனம் கோரியிருக்கிறது.
அரசாங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கை ஏன் அம்மாநில உயர் நீதிமன்றமே எடுத்து விசாரிக்கக் கூடாது? எதற்காக வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்? இங்கேயே வழக்கு நடந்தால் அந்நிறுவனத்தின் தில்லுமுல்லுகள் உடனுக்குடன் மக்களுக்கு சென்றுவிடும்.
வேறு மாநிலம் என்றால், அம்மாநில பிரச்சினைகளைத்தான் அங்குள்ள ஊடகங்கள் முன்னெடுக்கும். இந்த பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த நாடகத்தை தமிழக அரசு நடத்துகிறது. இதன்மூலம் டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகி உள்ளது.
இதுபற்றி சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. அதேபோல் நாங்கள் வெளியேற்றப்பட்டபோது 'நொந்து நுலாகிப் போன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்' என்று முதல்வர் சொல்கிறார். அதிமுக எப்போதுமே நொந்து நுலாகி போனது கிடையாது. நாங்கள் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறோம்.
கச்சத்தீவு 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு விவகாரத்தில் மற்றவர்கள் மீது பழி போட்டுவிட்டு முதல்வர் தப்பிக்க பார்க்கிறார். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் கதையாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பிரச்சினையை உருவாக்குவதும் திமுகதான். அதை திசை திருப்புவதும் திமுகதான்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் சந்தித்தது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? அதிமுகவை குறை சொல்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான பிரச்சினைகளைப் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT