Published : 08 Apr 2025 01:35 AM
Last Updated : 08 Apr 2025 01:35 AM
சென்னை: ’அந்த தியாகி யார்?’ என்ற பேட்ஜ் அணிந்து, பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்ததற்காக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அந்த சஸ்பெண்ட் உத்தரவை பேரவை தலைவர் மு.அப்பாவு திரும்பப் பெற்றார்.
தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘அந்த தியாகி யார்?’ என்ற கருப்பு பேட்ஜ் அணிந்தும், சில உறுப்பினர்கள் அதனுடன் அதே வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். ஒரு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேச முயன்றபோது, அதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுமதிக்கவில்லை. இதனால், பேரவையில் கூச்சல் குழப்பமும், வாக்குவாதமும் ஏற்பட்டது.
அப்போது, அதிமுக உறுப்பினர்கள் பதாகைகளை தூக்கி கட்டினர். இது விதமீறல் என்பதால் 13 அதிமுக உறுப்பினர்களை ஒருநாள் மட்டும் நீக்கி பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் மற்ற அதிமுக உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு: எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பொருள் குறித்து விவாதிக்க வேண்டும் என எனது அறைக்கு வந்து கேட்டார். அது நீதிமன்றத்தில் இருப்பதால், அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னேன்.
அதன் பிறகும் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த பேரவையில் குந்தகம் விளைவிக்க வேண்டும் என்று தொடர்ந்து இப்படி நடப்பது நியாயம் இல்லை. ஆவணங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் கொடுக்கலாம். அவர்கள் ஆட்சியில் ஒரு விதி, இந்த ஆட்சியில் ஒரு விதி என்பது இல்லை. எல்லோருக்கும் பொதுவாக பேரவை நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் பிடித்திருந்த பதாகையிலும் பேட்ஜிலும் ‘அந்த தியாகி யார்’ என்ற வாசகம் இருந்தது. மறைந்த எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவை, அதற்கு பிறகு பொறுப்பேற்று இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடியவர், தாங்கள் சிக்கி இருக்கக்கூடிய பல்வேறு வழக்குகள், பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, யாருடைய காலில் போய் விழுந்தார்கள்.
அப்படி விழுந்ததால் நொந்து போய் இருக்கக்கூடிய அதிமுக உறுப்பினர்கள் தான் இன்றைக்கு தியாகிகளாக உள்ளனர். முதல்வர் பதவிக்காக யாருடைய காலில் விழுந்து ஏமாற்றினாரோ, அவர்தான் இன்றைக்கு தியாகியாக இருக்கிறார். தியாகி என்று எழுதி வந்ததற்காக இந்த விளக்கத்தை தெரிவித்தேன். வேறு ஏதுமில்லை.
அப்பாவு: வாசகங்கள் அடங்கிய பதாகைகள், வில்லைகள் (பேட்ஜ்) அணிந்து வந்தால், சட்டப்பேரவைக்குள் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பேரவையில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு பிரச்சினை குறித்து பேச முயற்சி செய்து கூச்சல் குழப்பம் விளைவித்ததற்காக அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவையின் விதியின் கீழ் ஒரு கூட்டத்தொடரில் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டால், அந்த கூட்டத்தொடருக்கு அவர்கள் வராமல் இருக்குமாறு பேரவை தலைவர் கட்டளையிடலாம். அதந்த விதியின்கீழ் இந்த கூட்டத்தொடர் முழுவதும் தற்போது வெளியேற்றப்பட்ட 13 பேரும் கலந்து கொள்ள இயலாது.
மு.க.ஸ்டாலின்: பேரவைத் தலைவர் வழங்கிய உத்தரவில், கூட்டத்தொடர் முழுவதும் என்பதை மாற்றி இறுதியாக எச்சரித்து, அவர்களை இந்த கூட்டத்தொடரில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்பாவு: முதல்வரின் கோரிக்கையை ஏற்று அவர்களை எச்சரித்து நாளை (இன்று) முதல் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கிறேன். அதேநேரம் ஏதேனும் வாசகங்கள் அடங்கிய வில்லைகள் அணிந்துவர அனுமதி கிடையாது. இது அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT