Published : 07 Apr 2025 08:19 PM
Last Updated : 07 Apr 2025 08:19 PM
சென்னை: “வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்” என்று மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது சேடிஸ்ட் பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும். உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பொட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும், பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் என கேஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களை தள்ளிவிட்டார்களே? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது.
மக்களே, அடவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. மத்திய பாஜக அரசே தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திருக்காமல் இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்கின்றன. கடந்த 2024 மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதன்படி, சிலிண்டர் விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்தது.
அதன்பிறகு, கடந்த ஓராண்டில் வர்த்தக சிலிண்டர் விலை சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.550 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.8) அமலுக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT