Published : 07 Apr 2025 02:41 AM
Last Updated : 07 Apr 2025 02:41 AM
சென்னை: புதிய தலைவர் நியமனம், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜகவை பொருத்தவரை 2026 தேர்தலில் தனது செல்வாக்கை மேலும் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே, 4 எம்எல்ஏக்கள் பாஜகவில் இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்த முறை எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதற்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதென்று பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, அதிமுகவுடன் பாஜக இணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி வாய்ப்பு அதிகரித்திருப்பதாக பேசப்பட்டது.
பழனிசாமி சென்று வந்த அடுத்த நாளே அண்ணாமலையும் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணி அமைப்பது குறித்து தனது கருத்தை முன்வைத்தார். இந்த சந்திப்புக்கு பிறகு, 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா சூசகமாக தெரிவித்தார்.
இதையடுத்து டெல்லி பாஜக தலைவர்களின் பார்வை தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நிர்மலா சீதாராமன் சென்னை வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக பாஜக ஸ்தாபன நாளான நேற்று பாஜக நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம், எஸ்.ஜி.சூர்யா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கட்சி ஸ்தாபன நாளையொட்டி, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு, 100 நாள் வேலை திட்டம், கட்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் தமிழக அரசு தவறான தகவலை பரப்பி வருவதாகவும், இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, 2026 தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தேர்தல் கூட்டணி, கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் புதிய மாநில தலைவரை விரைவில் டெல்லி மேலிடம் நியமித்துவிடும் என்றும், மாநில தலைவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கட்சியின் வளர்ச்சிக்கும், சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கும் உழைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் அமையும் என்றும் அவர் நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார். இதையடுத்து, நிர்வாகிகளுடன் சேர்ந்து நிர்மலா சீதாராமன் உணவருந்தினார்.
அமித் ஷா சென்னை வருகை? - மத்திய உள்துறை அமித் ஷா ஏப்.10-ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஓரணியில் திரண்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, ஏப்.11-ம் தேதி தமிழக பாஜக தலைவர்களை அமித் ஷா சந்திக்க இருப்பதாகவும், அப்போது புதிய மாநில தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT