Published : 06 Apr 2025 07:51 PM
Last Updated : 06 Apr 2025 07:51 PM
சேலம்: “பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியும் நிலையில் அதிமுக உள்ளது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலம் மாநகரில் ஆகஸ்ட் 15, 16, 17, 18 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள். மத்திய அரசு பின்பற்றக்கூடிய கொள்கைகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய சட்டங்கள் போன்றவை நாடு ஏதோ ஒரு ஆபத்தை நோக்கிச் செல்வதை உணர்த்துகிறது.
தேசிய கல்விக் கொள்கை என்பது 90 சதவீத மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டமாகும். இது வெறும் மொழிப் பிரச்சினை, பணப்பிரச்சினை அல்ல, கல்வியே இல்லாமல் செய்யும் முயற்சி . ஒரே நாடு ஒரே தேர்தலின் நோக்கம் ஒரே கட்சி ஒரே ஆட்சி என்பதுதான். தேர்தல் ஆணையத்தின் பல் பிடுங்கப்பட்டுவிட்டது.
வக்பு வாரிய மசோதா முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட திட்டம். இதை நிறைவேற்றிய தினத்தை கருப்பு தினமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. பாஜகவின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் சில கட்சிகள் சிக்கி, அவர்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றன. அதிகாரம், பண பலம், மிரட்டல் இவற்றை கொண்டு எல்லா கட்சிகளையும் அழிக்க நினைக்கிறது.
பாஜகவின் உத்தரவுக்கு அதிமுக கட்டுப்படவில்லை என்றால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாற்றப்படுவார். பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்லும் நிலையில் உள்ளது.
இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி, கச்சத்தீவை மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைப்பதற்கு , அந்த அரசிடம் பேசினாரா? அதற்கான உத்தரவாதத்தை பெற்றாரா எனத் தெரிய வேண்டும். மீனவர்களை விடுவிக்க மோடி பேசியதாக, செய்திகள் வெளியாகி உள்ளது, விடுவித்தால் மகிழ்ச்சி.
எதிர்காலத்தில் படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது, இலங்கை கடற்படை தாக்குதல் போன்றவை இருக்காது என்ற உத்திரவாதத்தை அவர் பெற்றுத் தருவாரா என்பதுதான் கேள்வி. இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT