Published : 06 Apr 2025 07:18 PM
Last Updated : 06 Apr 2025 07:18 PM
மதுரை: “பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பங்கேற்காமல் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துள்ளார். இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்.” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் மோடி ரூ.8300 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார். ராமநவமி நாளில் ரூ.580 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை. இதற்காக முதல்வர் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க வேண்டியது நம்முடைய பிரதிநிதியாக உள்ள முதல்வரின் தலையாய கடமை. அந்த கடமையை நிறைவேற்றாமல் வெயில் கொடுமையால் ஊட்டிக்கு சென்று விட்டார். பாஜக இதை வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்களுக்காக பணி செய்ய வந்த பிரதமரை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார். அதற்கு முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
முதல்வர் ஊட்டியில் அமர்ந்து கொண்டு ராமேஸ்வரம் வரும் பிரதமர் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என கூறியுள்ளார். தொகுதி மறு சீரமைப்பு குறித்து தமிழக முதல்வர் தவறாக பேசி வருகிறார். இதை ஒரு காரணமாக வைத்து ஊட்டியில் ஒளிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிரதமர் பங்கேற்ற விழா அரசு விழா. இதனால் மேடைக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் பிரதமர் ராமேஸ்வரம் கோயில் சென்றபோது உடன் சென்றேன். மேடையில் மக்கள் பிரதிநிதிகளாக மத்திய அமைச்சர் எல்.முருகன், பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி திறந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுவது எனக்கு தெரியாது.
நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி தைரியமாக கூறுவாரா என முதல்வர் பேசியுள்ளார். இந்திரா காந்தியை திட்டியவர் கருணாநிதி. பின்னர் இந்திராவை வரவேற்றார். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள். நான்கு ஆண்டுகளாக அந்த ரகசியம் எங்கு உள்ளது என்பதை சொல்லவில்லை.
உப்பு சப்பு இல்லாத காரணத்தை முன்வைத்து அடுத்தவர்கள் கூட்டணி குறித்து முதல்வர் தேவையில்லாமல் பேசியுள்ளார். இது முதல்வர் வேலையில்லாமல் உள்ளார் என்பதையே காட்டுகிறது. பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என பலமுறை கூறிவிட்டேன். இதுவரை தலைவராக இருந்து என்ன பணி செய்தேனோ அதே பணியை தொண்டனாக இருந்து தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுனர் தமிழசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை சமர்ப்பிக்கும் இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்க வேண்டும். முதல்வர் கலந்து கொள்ளாததை தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்படித்தான் மோடி, ஆயிரக்கணக்கான திட்டங்களை அறிவிப்பதற்காக தெலங்கானா வருவார். அந்த மாநில முதல்வர் அதனை புறக்கணிப்பார். பிரதமர் அந்த மாநிலத்திற்கு வரும்போது அந்த மாநில முதல்வர் அவரை வரவேற்க வேண்டும் என்பது அரசு விதி. அதையும் மீறி முதல்வர் ஊட்டிக்கு சென்றுள்ளார். ஊட்டிக்கு எப்போது வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். பிரதமர் நிகழ்ச்சிக்கு முதல்வர் வராமல் இருந்தது சரியல்ல.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT