Published : 06 Apr 2025 12:38 AM
Last Updated : 06 Apr 2025 12:38 AM
‘சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஏப்.9-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபையும், மதச்சார்பற்ற பண்புகளையும் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தை சிறுமைப்படுத்தி அழித்தொழித்துவிட்டு, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை நிராகரித்து பெரும்பான்மை மத அடிப்படை வாதத்தின் அச்சில் நாட்டை ‘இந்து ராஷ்டிரமாக’ கட்டமைக்கும் முயற்சிகளை ஆர்எஸ்எஸ் தீவிரப்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களின் சமூக சொத்துகளை பராமரித்து வரும் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து, முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்கும் மசோதாவை நிறைவேற்றி, சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகளின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், திருத்தங்களையும் முற்றாக நிராகரித்து, ஏதேச்சதிகார முறையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், தேச ஒற்றுமையை, நீடித்த அமைதியை பாதுகாக்க வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஏப்.9-ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT