Last Updated : 05 Apr, 2025 06:35 PM

1  

Published : 05 Apr 2025 06:35 PM
Last Updated : 05 Apr 2025 06:35 PM

இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள்: பிரதமரின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு

அரியலூர்: இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இலங்கை வாழ் தமிழர்கள் சுதந்திரமாக அவர்களது மண்ணில் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் காட்டத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (ஏப்.5) நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் சிதம்பரம் எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இன்றைய நாளில் பிரதமர் இலங்கையில் இருக்கிற சூழலில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து காலம் காலமாக விடுத்து வருகிற கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் சுதந்திரமாக கச்சத்தீவு வரையில் சென்று மீன்பிடிப்பதற்குரிய உரிமைகளை வலியுறுத்த வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்படும் என பிரதமர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு ஏற்கெனவே வீடுகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கூட இன்னும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் சொந்த கிராமத்துக்கு செல்ல முடியவில்லை. காணிகளை மீட்க முடியவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்மணிகள் கணவரை இழந்து பரிதவிக்கும் அவலம் நீடிக்கிறது.

எனவே, அந்த மண்ணின் மைந்தர்கள் சுதந்திரமாக அங்கு வாழ வேண்டுமானால் காணிகளை ஆக்கிரமித்து இருக்கிற சிங்கள ராணுவத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். சிங்களர்களின் குடிப்பெயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்வது தான் ஈழத் தமிழர்களுக்கு செய்கிற மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும். இலங்கை அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது கொடுத்திருப்பது மகிழ்ச்சி. இந்தியா, இலங்கை இரு நாடுகளின் உறவை நல்லிணக்கமாக பேணுவதற்கு அவர்கள் இந்த விருது கொடுத்திருக்கலாம்.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அடாவடித்தனமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நள்ளிரவுக்கு மேல் விவாதத்தை நடத்தி இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கான ஒரு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அநீதியை மோடி அரசு அரங்கேற்றிருக்கிறது. அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஆனாலும் கூட்டணி கட்சிகளை தம் கட்டுக்குள்ளே வைத்து இந்த சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 232 பேர் எதிர்த்து வாக்களித்திருக்கிறோம்.

மக்களவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்து இருக்கிறோம். மாநிலங்களவையில் இவ்வளவு கடுமையான எதிர்ப்புக்கிடையே இந்த சட்டத்தை அவர்கள் நிறைவேற்றி இருப்பது சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய நாள் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று வரலாறில் பதிவாகி இருக்கிறது” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x