Published : 04 Apr 2025 12:00 PM
Last Updated : 04 Apr 2025 12:00 PM
சென்னை: “மத்திய அரசு நமது நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை நிராகரித்தாலும், அத்தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டம் ஓய்ந்து விடாமல் தொடரும். அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் ஒரு கலந்தாலோசனைக்கூட்டம் வரும் 9-ம் தேதி மாலை நடைபெறும்.” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரவையில் முதல்வர் பேசியதாவது: மருத்துவப்படிப்பில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் முன்னுரிமையும், சமவாய்ப்பையும் உருவாக்கும் நுழைவுத்தேர்வு முறையை கருணாநிதி உருவாக்கினார். சமூக நீதியை நிலைநாட்டி, கிராமபுறங்களில் உள்ள எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை நினைவாக்கும் இந்த முறையால் தான் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவச் சேவையை வழங்கி வருகிறோம்.
ஆனால் நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர், இந்தத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற முடியாத கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகி விட்டது.
மாநிலத்தின் கிராம பகுதிகளிலும், பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளை எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும். நீட் தேர்வானது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்த நகர்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது என்பதிலும், இந்தத் தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும் தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் உள்ள கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழுவை இந்த அரசு அமைத்தது.
அக்குழுவின் பரிந்துரைப்படி சட்டப்பேரவையில் 2021,செப்.13 அன்று தமிழ்நாடு மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் -2021 என்ற சட்ட முன்வரைவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின்பும் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்படமால், மறுபரிசீலனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் தலைமையில் 2022, மே 2-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த சட்டமுன்வரைவை மீண்டும் பேரவையில் அறிமுகப்படுத்தப்படும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அச்சட்ட முன்வரைவு மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் மூலம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக சட்ட முன்வரைவு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை, ஆயுஷ்துறை, உள்துறை, உயர் கல்வித்துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் தமிழக அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களை வழங்கியது. ஆனால் இவற்றை எல்லாம் ஏற்காமல், நமது மாணவர்களுக்கு பெரும் பேரிடியாக மத்திய அரசு நமது நீட் தேர்வு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளது என்ற வருத்தமான செய்தியை பேரவையில் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பினை அவமதித்துள்ள மத்திய அரசின் ஏதேச்சதிகார போக்கு அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்தின் கருப்பு அத்தியாயம். தமிழக மக்களின் எண்ணங்ளையும் பேரவையின் தீர்மானங்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவே இல்லை.மத்திய அரசு நமது கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம், ஆனால் நீட்த்தேர்வினை ரத்து செய்வதற்கான நமது போராட்டாம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை.
போராட்டத்தின் அடுத்தக்கட்டத்தில் நாம் எடுக்கவேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டவல்லூநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும். மேலும் இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் ஒரு கலந்தாலோசனைக்கூட்டம் வரும் 9-ம் தேதி மாலை நடைபெறும். அதில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளுமாறு இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் மருத்துவர் கனவோடு கல்வி பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக அவர்களின் கனவை நனவாக்க, தமிழக அரசு உறுதியோடு அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT