Published : 04 Apr 2025 06:30 AM
Last Updated : 04 Apr 2025 06:30 AM
சென்னை: புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக பாஜக சார்பாக நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின்போது, புளியன்குடி பகுதி விவசாயப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையான, புளியன்குடி எலுமிச்சைக்கு, புவிசார் குறியீடு பெறுவதை நிச்சயம் நிறைவேற்றித் தருவோம் என்று உறுதி அளித்திருந்தோம்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 11 ஆண்டுகளில், தமிழகத்தில் பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு புவிசார் குறியீடு என்பது, உலக அரங்கில் அதற்கான மதிப்பை மிகவும் அதிகரிப்பதோடு, அதன்மூலம் வணிகமும், ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரித்து, அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் நிச்சயம் உயரும்.
அதன்படியே, புளியங்குடி எலுமிச்சைக்கும் புவிசார் குறியீடு பெறுவதன் மூலம், ஏற்றுமதி அதிகரித்து, அந்தப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. கடந்த மாதம் தென்காசியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், புளியன்குடி எலுமிச்சைக்கு, வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், புவிசார் குறியீடு அறிவிப்பு வெளியாகும் என்று நம்பிக்கை அளித்திருந்தோம். அதன்படியே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. இதன்மூலம், புளியன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும், பயனடையும் என்பது உறுதி.
நாட்டின் தென் எல்லையில் இருக்கும் தென்காசி மாவட்டம் புளியன்குடி கிராம மக்கள் சார்பாக, தமிழக பாஜக முன்வைத்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, நிறைவேற்றித் தந்த பிரதமர் மோடிக்கும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும், தமிழக விவசாய பெருமக்கள் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும், மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT