Published : 04 Apr 2025 06:14 AM
Last Updated : 04 Apr 2025 06:14 AM

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியதோடு, சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியதும், நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

மத நல்லிணக்கத்துக்கும் சிறுபான்மையின இஸ்லாமிய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தைத் திருத்துவதற்கு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத்திருத்த முன்வரைவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் கடந்த மார்ச் 27-ம் தேதி சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 288 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

இச்சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல, இந்த சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் நாம் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒருசில கூட்டணிக் கட்சிகளின் தயவால் இன்று அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதலாகும். மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம். சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும்.

வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும். அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டபூர்வமாகவே தடுப்போம். இ்வ்வாறு முதல்வர் பேசினார்.

அதையடுத்து முதல்வரின் அறிவிப்புக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, அசன் மவுலானா (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.

வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் தொடர்பான முதல்வரின் கண்டனத்துக்கும், அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து நயினார் நாகேந்திரன் (பாஜக) பேசும்போது, “வக்பு சட்ட திருத்த மசோதா முழுக்க முழுக்க நிர்வாகக் காரணங்களுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. 14 வகையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பு மதரீதியாக இருக்கக்கூடாது. எனவே, அதனை ஏற்காமல் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்று தெரிவித்தார். அதையடுத்து பாஜக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளியேறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x