Published : 03 Apr 2025 05:50 PM
Last Updated : 03 Apr 2025 05:50 PM

2025-க்குள் 50,000 முதியோருக்கு ஓய்வூதியத் தொகை, 6 லட்சம் பட்டா: பேரவையில் அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும், மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதிலளித்துப் பேசியது: “பொது மக்களுடன் பின்னிப் பிணைந்தது வருவாய்த் துறை. அவர்களின் அன்றாட நிகழ்வுகளுடன் நெருக்கானது இத்துறை. முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அனைத்து சமூக நலத்திட்டங்களும், பட்டா, சாதி சான்று என அனைத்து வகையான சான்றிதழ்களும் வருவாய்த்துறை மூலமாகவே வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் பேருக்கு என்ற அளவில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்.

சென்னையைச் சுற்றியுள்ள 32 கிமீ தூரம் பெல்ட் பகுதி எனக் குறிப்பிட்டு அப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க தடை சட்டம் இருந்து வரும் நிலையில் பெல்ட் ஏரியாவில் 16 கிலோ மீட்டர் தூரத்தில் குடியிருந்து வரும் அனைவருக்கம் பட்டா கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேய்க்கால் புறம்பாக்கு பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும். நீர்நிலை புறம்போக்கு நீங்கலாக அரசு புறம்போக்கு மற்றும் மேக்கால் புறம்பாக்கு பகுதியில் குடியிருந்து வரும் யார் கண்ணிலும் கண்ணீர் வர விடமாட்டோம்.

நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும். சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் 160 ஏக்கர் நிலம், கதீட்ரல் சாலையில் உள்ள தோட்டக்கலை சங்க நிலம், நீலகிரி ரேஸ்கோர்ஸ் நிலம் ஆகியவற்றை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர தைரியமாக நடவடிக்கை எடுத்தவர் முதல்வர். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.20,365 கோடி மதிப்புள்ள 35,654 அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளோம். ரயில்வே , தேசிய நெடுஞ்சாலை, விமான நிலைய திட்டங்களுக்கு தேவையான நிலங்களை விரைவாக கையகப்படுத்தி கொடுத்து வருகிறோம்.

அந்த வகையில், மதுரை, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிக்கு தேவையான நிலம் முழுழுவதும் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்துக்கு இதுவரை 468 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் ஒரு கோடியே 11 லட்சம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டார். முதியோர் ஓய்வூதியம் பெற்றால் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாது.

அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களையும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்களையும் ஆய்வுசெய்யும் பணி நடந்ததால்தான் ஜூலை மாதம் வழங்கப்படவில்லை. தற்போது தகுதியான பயனாளிகளுக்கு தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். திமுக ஆட்சிப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் 3 கோடியே 78 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறையில் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு 15 நாட்களில் உரிய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 22 லட்சத்து 59 ஆயிரம் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் இந்த ஆண்டு 24 மாவட்டங்களில் 1270 முகாம்கள் நடத்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் மழை வெள்ள நிவாரண ரூ.15,272 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி தராவிட்டாலும் கூட தமிழக அரசு வெள்ள நிவாரண நிதி வழங்கியது. வருவாய்த்துறையின் சாதனைகள் பற்றி குறிப்பிடும்போது, கடந்த 4 ஆண்டுகளில் 13 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளோம். ஒரு கோடியே 11 லட்சம் பட்டா மாற்ற பணி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 9 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. முதியோர் ஓய்வூதியத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் பேசினார். தொடர்ந்து அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

  • கல்லூரிகளில் இளங்கலை பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடம் அறிமுகப்படுத்தப்படும். பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள பேரிடர் மேலாண்மை பாடத்திட்டம் மேம்படுத்தப்படும்.
  • நவீன முறையில் நிலஅளவை பணிகளை மேற்கொள்ள 454 நிலஅளவை பணியாளர்களுக்கு ரூ.27.24 கோடி மதிப்பீட்டில் டிஜிபிஎஸ் ரோவர்ஸ் கருவிகள் வழங்கப்படும். மேலும், இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தை விரைவாக மேற்கொள்ள வசதியாக 3078 நிலஅளவை பணியாளர்களுக்கு ரூ.15.6 கோடி செலவில் மடிக்கணினி வழங்கப்படும்.
  • அரசின் திட்டங்கள் பொதுமக்களை விரைவாக சென்றடையும் வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்களும் (பிர்க்கா), செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை, திருச்சி திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களில் 25 புதிய வருவாய் கிராமங்களும் உருவாக்கப்படும்.
  • தாலுகா அளவில் வருவாய்த்துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்தி பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கும் வகையில் புதிதாக 26 துணை வட்டாட்சியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
  • கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்கீழ், வீட்டு மனை இல்லாத, தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு பூமிதான நிலங்களில் இலவச வீட்டுமனை விநியோக பத்திரம் வழங்கப்படும்.
  • மனைவரி விதிக்கப்பட்ட இடங்களில் வருவாய் பின்தொடர் பணிகளை மேற்கொண்டு 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x