Last Updated : 03 Apr, 2025 01:12 PM

 

Published : 03 Apr 2025 01:12 PM
Last Updated : 03 Apr 2025 01:12 PM

‘கடும் சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக முயற்சி’ - வேல்முருகன்

தி.வேல்முருகன் | கோப்புப் படம்.

சென்னை: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா போன்ற கொடுமையான சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக நினைப்பதாக தவாக தலைவர் தி.வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் வாழும் 32 கோடி இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் உணர்வை மதிக்காமல், மத்திய பாஜக அரசு நேற்று நள்ளிரவு 2 மணிக்கு வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்டமாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு. ஜனநாயக நாடு. மதச்சார்பற்ற நாடு என்ற வரலாற்று பெருமை கொண்ட நாடாகும். இந்த பெருமைகளை குழி தோண்டி புதைக்கும் வகையில் சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்களை தொடர்ந்து பாஜக அரசு செய்து வருகிறது. தேசத்தின் விடுதலைக்கு தங்களது சொத்துக்களை அள்ளிக் கொடுத்தவர்கள் இஸ்லாமியர்கள். நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியவர்கள் கிறிஸ்துவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆனால் பொது சிவில் சட்டம் போன்ற எண்ணற்ற கொடுமையான சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஆள பாஜக நினைக்கிறது. இது அம்மக்களின் இளைய தலைமுறையினர் இடையே வக்கிரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தும் சூழல் இருக்கிறது. எனவே இதுபோன்ற சட்டங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைக்கு சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு கூட்டணி கட்சிகள் வருகை தந்தோம்.

அதேபோல் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான முதல்வரின் உரையையும் தவாக கட்சி வரவேற்கிறது. மேலும் தமிழகத்தில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். அதற்கும் எங்களது வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x