Published : 03 Apr 2025 12:49 PM
Last Updated : 03 Apr 2025 12:49 PM
மேட்டூர்: மேட்டூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கான முன்வைப்புத் தொகை, வாடகை உயர்வால், ஏலத்தில் கடைகளை எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் பழைய பேருந்து நிலையம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அங்குள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டு ரூ.6.40 கோடி மதிப்பில் புதியதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு 69 கடைகள், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து சுங்க வசூல், கழிப்பறை கட்டண வசூல், வாகன நிறுத்துமிடம், பேருந்துகள் வந்து செல்லும் நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்கும் உரிமம் உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டுள்ளன.
தொடர்ந்து, நகராட்சி சார்பில் 2 முறை 69 கடைகளுக்கான ஏலம் நடந்தது. இதில் 7 கடைகள் மட்டுமே ஏலம் போனது. மீதமுள்ள கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை. இதில் 2 பேர் கடைகளை திறந்துள்ளனர். மீதமுள்ள கடைகளுக்கு வரும் 9-ம் தேதி ஏலம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கடைக்கான வாடகை, முன்வைப்பு தொகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடைகளை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேருந்து நிலையத்தில் கடை நடத்திய வியாபாரிகள் கூறியதாவது: ''பேருந்து நிலையம் கட்டுவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது. முன்வைப்பு தொகையும் உயர்ந்துள்ளது. முன்வைப்புத் தொகை, ஓராண்டு வாடகை என ரூ.5 லட்சத்தை முன் கூட்டியே கட்ட வேண்டியுள்ளது. ஏலத்தில் கடையை எடுத்தால் பொருட்கள், டேபிள் உள்ளிட்டவை வாங்க ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 வரை தேவைப்படுகிறது. அதேபோல, மின் மீட்டர் வைக்க ரூ.5,000 கட்ட வேண்டும். கடைக்கான வாடகையுடன் ஜிஎஸ்டியும் கட்ட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கடை வாடகையும் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வோர் 4 ரோடு பகுதியிலேயே பேருந்தில் ஏறிச் செல்வதால், பேருந்து நிலையத்துக்கு பயணிகள் வருகையும் சரிந்துள்ளது. முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்களில் மட்டுமே பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அந்த நாட்களை மட்டுமே நம்பி வியாபாரம் நடப்பதில்லை. எனவே, கடைக்கான வாடகை, முன்வைப்பு தொகை உள்ளிட்டவற்றை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT