Published : 03 Apr 2025 12:02 PM
Last Updated : 03 Apr 2025 12:02 PM
சென்னை: சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மார்க்சிய தத்துவ மேதை தோழர் கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.
அந்த கோரிக்கையை ஏற்று இன்று (3.4.2025) தோழர் கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இந்த அறிவிப்பை மேற்கொண்ட முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு: உலகப் புகழ்பெற்ற பேரறிவாளர் தோழர் காரல் மார்க்ஸுக்கு தலைநகர் சென்னையில் சிலை அமைக்கப்படும் என இன்று (03.04.2025) சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
பத்தொன்பாதம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் பிறந்தவர் காரல் மார்க்ஸ். கல்லூரியில் பயிலும் காலத்தில் தொலைநோக்கு பார்வையையும், கூர்த்த மதிநுட்பத்தையும் வெளிப்படுத்தி ஆய்வு உலகின் கவனத்தை ஈர்த்தவர். “இதுவரை இந்த உலகம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் பல்வேறு வகைகளில், கோணங்களில் இந்த உலகத்தைப் பற்றி வியாக்கானம் செய்துள்ளனர். ஆனால், நம் முன் உள்ள பிரச்சினை இந்த உலகை எப்படி மாற்றியமைப்பது என்பதுதான்” என்ற புரட்சிகர கருத்தை முன் வைத்து, அதற்கு செயல்வடிவம் காண வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
1848 பிப்ரவரி மாதம் அவரது இணையற்ற தோழர் பிரெடெரிக் ஏங்கல்ஸ்சுடன் இணைந்து கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளியிட்டு, சமூக வாழ்வில் “புதுமை படைக்கும் பொதுமை சமூகம் காண உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்” என்று அறைகூவி அழைத்தவர்.
சமூக பொருள் உற்பத்தி, விநியோகம் போன்றவைகளை ஆழ்ந்து ஆய்வு செய்து “மூலதனம்“ என்ற பெருநூலை சமூக புரட்சியாளர்களுக்கு ஆயுதமாக வழங்கியவர். காரல் மார்க்சின் நிகரற்ற தத்துவத்தை பழுதறக் கற்று, மாமேதை லெனின் தலைமையில் பொதுவுடைமை இயக்கம் யுகப்புரட்சி கண்டு புதிய சகாப்தத்தை தொடக்கி வைத்துள்ளது.
மாறி வரும் உலகில் மகத்தான புதுமை படைக்கும் உயிராற்றல் கொண்ட சமூக விஞ்ஞானத்தை படைத்து, வழங்கிய ஈடு இணையற்ற பேரறிவாளர் தோழர் காரல் மார்க்ஸுக்கு, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை பெருநகரில் சிலை அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவும், முதல்வர் அறிவிப்பும் வரலாற்றில் என்றென்றும் ஒளிர்ந்து நிற்கும் இந்த முடிவை அறிவித்த முதல்வருக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT