Published : 03 Apr 2025 06:42 AM
Last Updated : 03 Apr 2025 06:42 AM
சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்குட்பட்ட பரந்தூரில் ரூ. 34 ஆயிரம் கோடி செலவில் பசுமை வெளி விமான நிலையத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.
இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார் பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசு வசம் உள்ள ஆயிரத்து 972 ஏக்கர் புறம்போக்கு நிலமும், தனிநபர்கள் வசம் உள்ள 3 ஆயிரத்து 774 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மகாதேவி மங்கலத்தில் உள்ள 217 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி கடந்த 2024 மார்ச் மாதம் நோட்டீஸ் பிறப்பித்தார்.
நில உடமையாளர்கள் ஆட்சேபம்: இந்த நோட்டீஸை ரத்து செய்து, நிலத்தை கையகப்படுத்த தடை விதிக்கக்கோரி மகாதேவி மங்கலத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தனிநபர்களின் நிலங்களை கையகப்படுத்த தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்களை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இந்த திட்டத்துக்காக என்னுடைய ஒரு ஏக்கர் 69 சென்ட் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்,. எனக்கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.7-க்கு தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT