Published : 03 Apr 2025 09:02 AM
Last Updated : 03 Apr 2025 09:02 AM
சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
கடந்த மார்ச் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்காக மத்திய பாஜக அரசில் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும், அது தொடர்பான சந்திப்புதான் இது என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தம்பிதுரையிடம் கேட்டபோது. அவர் கூறியதாவது: தமிழகம்- கர்நாடக எல்லையில் ஜுஜுவாடி பகுதியில் வணிகவரித் துறையினர் வாகனங்களை சோதனையிடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கத்தான் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அதுவும் அவை மண்டபத்தில்தான் சந்தித்தேன். மத்திய அமைச்சர் பதவிக்காக அவரை சந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், நேற்று சி.வி. சண்முகம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை மீண்டும் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “அதிமுகவினர் ஒன்றுபட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT