Published : 03 Apr 2025 08:52 AM
Last Updated : 03 Apr 2025 08:52 AM
நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்று 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. ஓர் அறையில் தேர்வெழுதிய மாணவி முகக்கவசம் அணிந்து இருந்ததால் சந்தேகமடைந்த தேர்வுக் கண்காணிப்பாளர், முகக்கவசத்தை அகற்றும்படி கூறினார். அப்போது, மாணவி வைத்திருந்த நுழைவுச் சீட்டில் இருந்த படமும், தேர்வுக் கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் இருந்து படமும் வேறுபட்டிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வாம்பிகை (23) என்பதும், நாகை அரசு மருத்துவமனையில் சமையல் உதவியாளராகப் பணிபுரியும் தாய் சுகந்திக்கு (44) பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முற்பட்டதும் தெரியவந்தது. கடந்த 28-ம் தேதி நடைபெற்ற தமிழ்ப் பாட தேர்வையும் செல்வாம்பிகையே எழுதியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவரை விசாரணைக்காக வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். கல்வித் துறை அதிகாரிகளின் ஆலோசனைபெற்று, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT