Published : 03 Apr 2025 06:15 AM
Last Updated : 03 Apr 2025 06:15 AM
சென்னை: மயிலாப்பூர் அபிராமபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை 3 மாதங்களில் அகற்ற அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயி்ன்ட் மேரீஸ் சாலையில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் உரிய திட்ட அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகக்கூறி பிலோமீனா ஷோஜனார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தற்போது வழிபாட்டுத்தலமாக பயன்படுத்தப்பட்டு வரும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி வரை கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம், மணிக்கூண்டு மற்றும் குடியிருப்புகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. எனவே ஏற்கெனவே அத்துமீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டுமானங்களை இடிக்கவும், புதிதாக எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என தடையும் விதிக்க வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வி்ல நடந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எம். சுரேஷ்குமார் ஆஜராகி சென்னை மாநகராட்சி 9-வது மண்டல அதிகாரி பி.எஸ்.ஸ்ரீனிவாசன் சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
அதி்ல், ‘‘ எந்த அனுமதியும் பெறாமல் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கிறிஸ்துவ ஆலயத்தை சீரமைக்கும் நோக்கில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கிறிஸ்துவ ஆலய கட்டுமானப்பணிகளை சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸாரின் உதவியுடன் கடந்த மார்ச் 22-ம் தேதியன்று ஆய்வு மேற்கொண்டபோது உரிய திட்ட அனுமதி பெறாமல் புதிதாக சர்ச் கட்டுமானம், நுழைவு வாயில், மணிக்கூண்டு ஆகியவையும், சில குடியிருப்புகளும் என சுமார் 5 ஆயிரம் சதுர அடி அளவுக்கு எந்த அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அதையடுத்து மணிக்கூண்டு கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எஞ்சிய சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்ப்டடுள்ளது, என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 3 மாத காலத்தில் இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற மாநகராட்சி, சிஎம்டிஏ மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT