Published : 03 Apr 2025 05:29 AM
Last Updated : 03 Apr 2025 05:29 AM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது. உணவகங்கள் மூடப்பட்டதால் உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர்.
நீலகிரி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் மாதம் இறுதி வரை இ-பாஸ் முறை கட்டுப்பாடுகளை அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
வார நாட்களில் 6,000 வாகனங்கள், வார இறுதியில் 8,000 வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளிலும் உயர் நீதிமன்றம் அறிவித்த எண்ணிக்கையின் அடிப்படையில் இ-பாஸ் சோதனை மேற்கொண்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடைமுறையால், ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை மையமாகதக் கொண்டு செயல்பட்டு வரும் ஹோட்டகள், தனியார் தங்கும் விடுதிகள், சிறு, குறு வணிக நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகக் கூறி, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும், சோதனை என்ற பெயரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, கடைகளுக்கு அபராதம் விதிப்பது, சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.
இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உணவகங்கள், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. ரம்ஜான் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், முழு அடைப்பு காரணமாக கடைகள் ஏதுமில்லாததால், சுற்றுலாப் பயணிகள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.
இந்நிலையில், அம்மா உணவகங்கள் செயல்பட்டதால், நேற்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட்டு தங்கள் பசியைப் போக்கினர். இதனால், அம்மா உணவகங்களில் கூட்டம் களைகட்டியது. வழக்கமாக தயாரிக்கப்படும் உணவைவிட கூடுதலாக தயாரிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், முழு கடையடைப்பு போராட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு தெரிவித்தாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் முகமது பாரூக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT